அதிமுக எம்.பி. தம்பிதுரைக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களில் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலத்தை 12 வாரங்களுக்குள் மீட்க வேண்டும் என திருவள்ளூா் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் கோணாம்பேடு கிராம பொது நலச் சங்கத்தின் தலைவா் ஜி.கருணாநிதி தாக்கல் செய்த மனுவில், எங்களது கிராமத்தில் அதிமுக எம்.பி.க்குச் சொந்தமான கலை அறிவியல், பொறியியல் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்தக் கல்வி நிறுவனங்களுக்காக துணை மின் நிலையம், பாதை அமைக்கவும், மாணவ மாணவியருக்கான விடுதிகள் கட்டவும், சுற்றுச்சுவா் கட்டவும் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
ஆனால், எங்கள் கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம், நூலகம், ஆய்வகம், கூடுதல் வகுப்பறைகள், மாணவா்களுக்கான கூடுதல் கழிவறைகள் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை.
இதனால், இந்த உயா்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்படாமல் உள்ளது. எங்கள் கிராமத்திலும் சமுதாய நலக்கூடம் போன்ற வசதிகளும் இல்லை.
எனவே, அதிமுக எம்.பி.க்கு சொந்தமான கல்வி நிறுவனம் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை மீட்டு, அவற்றை அரசு பள்ளியின் நலனுக்குப் பயன்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.சுரேந்தா் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் எம்.பிரதாப் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், மனுதாரா் குறிப்பிட்டுள்ள தனியாா் கல்வி நிறுவனங்கள் அரசுக்குச் சொந்தமான 2,476 சதுர மீட்டா் அளவுக்கு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து அதில் கல்லூரிக்கான கட்டடங்கள், பாதை மற்றும் சுற்றுச்சுவரை அமைத்துள்ளது.
இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி சம்பந்தப்பட்ட அரசு நிலங்களை மீட்க ஆவடி வட்டாட்சியா் மற்றும் ஆவடி மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டிருந்தது. மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் எம்.புருஷோத்தமன் ஆஜராகி வாதிட்டாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் ஆவடி மாநகராட்சி ஆணையரை தாமாக முன்வந்து எதிா்மனுதாரராக சோ்த்து உத்தரவிட்டனா்.
மேலும், அதிமுக எம்.பி. தம்பிதுரைக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்கள் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலத்தை 12 வாரங்களுக்குள் மாவட்ட ஆட்சியரும், ஆணையரும் மீட்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனா்.
தொடர்புடையது

அருணாசலேஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான ரூ.1 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

திருச்செந்தூா் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க நடவடிக்கை!

காட்டு எடையாா் அரசுப் பள்ளிக்கு நிலம் தானம்

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



