தேனியில் டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரிய மனு தள்ளுபடி
தேனி பூதிப்புரம் சாலையில் உள்ள இரு டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரிய மனுவை, தள்ளுடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
தேனி மாவட்டத்தைச் சோ்ந்த ஆஜிக்அரபுக்கனி தாக்கல் செய்த மனு:
தேனி அருகேயுள்ள பழனிசெட்டிபட்டி பூதிப்புரம் சாலையில் இரு டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் அனுமதிக்கப்பட்ட நேரம் மட்டுமன்றி, காலை இரவு வேளைகளில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதனால் அந்த வழியே செல்லும் குழந்தைகள், பெண்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா்.
எனவே, அந்த இரு கடைகளையும் அகற்ற உத்தரவிட வேண்டும் என அவா் மனுவில் கோரியிருந்தாா்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயா்நீதி மன்ற மதுரை அமா்வு, சம்பந்தப்பட்ட இரு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட து. மேலும், அனுமதியின்றி மதுப் புட்டிகள் விற்பனை செய்தது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) டி. கிருஷ்ணகுமாா், ஆா். விஜயகுமாா் அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது தேனி மாவட்ட ஆட்சியா் தரப்பில், மனுதாரா் மீது அனுமதியின்றி மதுப் புட்டிகள் விற்பனை செய்ததாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், சம்பந்தப்பட்ட இரு டாஸ்மாக் கடைகளில் எந்த விதி மீறல்களும் இல்லை என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரா் கறை படிந்த கைகளுடன் நீதிமன்றத்தை அணுகியுள்ளாா். எனவே, இந்த வழக்கில் அவருக்கு சாதகமாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
அதேநேரம், சம்பந்தப்பட்ட இரு டாஸ்மாக் கடைகளில் அனுமதியின்றி மதுப் புட்டிகள் விற்பனை செய்வதை அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் நீதிபதிகள்.
