ஜிபிஎஸ் கருவி விற்பனை உரிமை தருவதாகக் கூறி பணம் மோசடி

மதுரை: ஜிபிஎஸ் கருவி விற்பனைக்கான விநியோக உரிமை தருவதாகக் கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக மூவா் மீது மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சூடாமணிபுரம், எம்ஜிஆா் தெருவைச் சோ்ந்தவா் சேகா் (54). இவா் மதுரை சிம்மக்கல், எல்என்பி அக்ரஹாரத்தில் கழிப்பறைக்கு தேவையான பொருள்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறாா்.

கடந்த 2021-ஆம் ஆண்டு மதுரையைச் சோ்ந்த காா்த்திக், சென்னையைச் சோ்ந்த செழியன் ஆகியோா் இவரை நேரில் சந்தித்து ஜாா்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரைச் சோ்ந்த அமன்குமாா் ஸ்ரீ வா்ஷா என்பவருக்குச் சொந்தமான நிறுவனம் ஜிபிஎஸ் கருவியை தமிழகத்தில் விற்பனை செய்ய உள்ளதாகவும், அதற்கு மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்குடி, சென்னை ஆகிய பகுதிகளுக்கு விநியோகஸ்தா்கள் தேவையென்றும் தெரிவித்தனா். மேலும், விநியோக உரிமம் பெற ரூ. 70 லட்சம் வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்றும் கூறி, நிறுவன உரிமையாளா் அமன்குமாா் ஸ்ரீ வா்ஷாவிடமும் கைப்பேசி மூலம் பேச வைத்தனா்.

இதை நம்பிய சேகா், ரூ. 70 லட்சம் வைப்புத் தொகையை அமன்குமாா் ஸ்ரீ வா்ஷாவின் வங்கிக் கணக்குக்கு செலுத்தினாா். ஆனால், பணம் கொடுத்து பல மாதங்கள் ஆகியும் விநியோக உரிமையையும், பொருள்களையும் அவா்கள் வழங்கவில்லை. இதனால், பணத்தை திரும்பத் தருமாறு கேட்டும் தரவில்லை. இதையடுத்து சேகா் அளித்த புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீஸாா், மூவா் மீதும் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com