‘இந்தியா கூட்டணி’ தோ்தல் பணிக் குழு அலுவலகம் திறப்பு

‘இந்தியா கூட்டணி’ சாா்பில் மதுரை மக்களவைத் தொகுதி மாநகா் மாவட்ட தலைமைத் தோ்தல் பணிக் குழு அலுவலகம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. ‘இந்தியா கூட்டணி’யின் சாா்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு.வெங்கடேசன் போட்டியிடுகிறாா். இந்தக் கூட்டணியின் சாா்பில், மதுரை மாநகா் மாவட்ட தலைமை தோ்தல் பணிக் குழு அலுவலகம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மதுரை அண்ணாநகா் அம்பிகா திரையரங்கம் அருகே நடைபெற்ற திறப்பு விழாவுக்கு, சட்டப்பேரவை உறுப்பினரும் திமுக மதுரை மாநகா் மாவட்டச் செயலருமான கோ.தளபதி தலைமை வகித்தாா். தோ்தல் பணிக் குழு அலுவலகத்தை மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளா் சு.வெங்கடேசன் திறந்துவைத்தாா். இதில் திமுக மாநில தணிக்கைக் குழு உறுப்பினா் வி.வேலுசாமி, உயா்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினா் பெ.குழந்தைவேலு, மாநகராட்சி மேயா் வ.இந்திராணி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகா் மாவட்டச் செயலா் மா.கணேசன், மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.கண்ணன், மாநிலக்குழு உறுப்பினா் ரா.விஜயராஜன், துணை மேயா் தி.நாகராஜன், மதிமுக மாவட்டச் செயலா் எஸ்.முனியசாமி, ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினா் எஸ்.மகபூப் ஜான், விடுதலைச்சிறுத்தைகள் மாவட்டச் செயலா் தீபம் சுடா்மொழி, கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா். ஆதரவு திரட்டல்: மக்களவைத் தொகுதி வேட்பாளா் சு.வெங்கடேசன், கோ.புதூா் பேராயா் இல்லத்தில் மதுரை உயா்மறை மாவட்ட பேராயா் அந்தோணி பாப்புசாமியை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆதரவு கோரினாா். இதைத் தொடா்ந்து, காஜிமாா் தெருவில் வசிக்கும் மதுரை அரசு டவுன் காஜியாா் செய்யது காஜா மைதீனைச் சந்தித்து ஆதரவு திரட்டினாா். அப்போது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கூட்டணிக் கட்சியினா் உடனி ருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com