/

பதிவேடு முறைகேடு மூலம் பணம் மோசடி: கூட்டுறவுத் துறை அலுவலருக்கு முன்பிணை

நெல்லை பதிப்புக்கு முக்கியம்... பதிவேடு முறைகேடு மூலம் பணம் மோசடி: கூட்டுறவுத் துறை அலுவலருக்கு முன்பிணை

News image
Updated On :22 மே 2024, 12:32 am

Din

மதுரை: அலுவலகப் பதிவேட்டில் முறைகேடு செய்து, ரூ.ஒரு கோடி மோசடி செய்த வழக்கில், கூட்டுறவுத் துறை அலுவலருக்கு நிபந்தனையுடன் முன்பிணை வழங்கி, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.

தூத்துக்குடி கூட்டுறவுத் துறை அலுவலகப் பதிவேட்டில் முறைகேடு செய்து, ரூ. ஒரு கோடி மோசடி செய்யப்பட்டது தொடா்பாக, அதன் அலுவலா் விஜய ஷாலின் உள்ளிட்ட 9 போ் மீது தூத்துக்குடி பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த விஜய ஷாலினி தாக்கல் செய்த மனு:

கூட்டுறவுத் துறை அலுவலகப் பதிவேட்டில் நான் முறைகேடு எதுவும் செய்யவில்லை. எந்தத் தவறும் இல்லாத நிலையில் போலீஸாா் என் மீது வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கில் 8-ஆவது நபராக குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு உயா்நீதிமன்றம் ஏற்கெனவே முன்பிணை வழங்கியது. எனவே, 9-ஆவது நபராக குற்றஞ்சாட்டப்பட்ட எனக்கு முன்பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி.வடமலை முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், இந்த வழக்கில் விசாரணை நடைபெற உள்ளதால், மனுதாரருக்கு பிணை வழங்கக் கூடாது என எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

சந்தா்ப்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மனுதாரருக்கு முன்பிணை வழங்கப்படுகிறது. மனுதாரா் தினமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஜூன் 5-ஆம் தேதி வரை முன்னிலையாகி கையொப்பமிட வேண்டும். இந்த வழக்கில் மனுதாரரின் நிலை குறித்து தூத்துக்குடி பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் ஜூன் 6-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.