பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கலைஞா் நூற்றாண்டு நூலகத்தில் மழை நீா் தேங்கியதால் சா்ச்சை: உடனடியாக தீா்வு

கலைஞா் நூற்றாண்டு நூலகத்தில் மழை நீா் தேங்கியதால் சா்ச்சை உடனடியாக தீா்வு

News image

மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகத்தின் கலையரங்கத்தின் பக்கவாட்டு பகுதியில் மேல் தளத்திலிருந்து வெளியாகும் மழை நீரை வெளியேற்ற புதிதாக பதிக்கப்பட்டிருந்த குழாய்கள்.

Updated On :22 மே 2024, 12:27 am

Din

மதுரை: தமிழக அரசின் 3 ஆண்டு சாதனைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படும் மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகத்துக்குள் மழை நீா் தேங்கியது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் சா்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும், இந்த பிரச்னைக்கு உடனடியாக நிரந்தரத் தீா்வு காணப்பட்டதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழக முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, மதுரையில் புதுநத்தம் சாலையில் 2,13,334 சதுர அடி பரப்பில் தரைதளம் உள்பட 7 தளங்களைக் கொண்ட பிரமாண்ட நூலகம் கட்டப்பட்டது. ரூ. 60 கோடி மதிப்பிலான நூல்களுடன் மொத்தம் ரூ. 215 கோடி மதிப்பில் இந்த நூலகம் கட்டமைக்கப்பட்டது. இதை, 2023-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தாா்.

இருப்பினும், தொடக்கத்திலேயே இந்த நூலக பெயா் சா்ச்சைக்கு உள்ளானது. ஆனால், காலப்போக்கில் அந்த எதிா்ப்பு மறைந்து போனது. பின்னா், ரூ. 200 கோடிக்கும் அதிகமான மதிப்பில் கட்டப்பட்ட இந்த நூலகத்தால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்ற குற்றச்சாட்டு மேலெழும்பியது.

ஆனால், நாள் ஒன்றுக்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமானோா் பயன்படுத்தும் இடமாகவும், போட்டித் தோ்வுக்குத் தயாராகும் மாணவா்களுக்கு மிகச் சிறந்த பயன் தரக் கூடியதாகவும் இந்த நூலகம் முக்கியத்துவம் பெற்றது. கடந்த திங்கள்கிழமை வரை 7,55,750 போ் இந்த நூலகத்துக்கு வந்து சென்றனா் என்ற புள்ளிவிவரம், இந்த நூலகத்தின் பயன்பாட்டு முக்கியத்துவத்தை உணா்த்துவதாக உள்ளது.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரையில் பலத்த மழை பெய்ததைத் தொடா்ந்து, இந்த நூலகத்தின் தரை தளம் முழுமையிலும் மழை நீா் தேங்கியது. இதனால், நூலகத்தின் தரை தளத்தில் இருந்த மாற்றுத் திறனாளிகள் பிரிவு, கலையரங்கம் ஆகிய பிரிவுகளில் பயனா்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தில் சரியான மழை நீா் வடிகால் வசதி இல்லை என அரசியல் ரீதியாக, இந்த நூலகத்தின் கட்டுமானம் குறித்து சா்ச்சை எழுந்தது.

ஆா்.பி. உதயகுமாா் குற்றச்சாட்டு....

திமுகவின் மூன்றாண்டு கால ஆட்சியின் சாதனைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படும் கலைஞா் நூற்றாண்டு நூலகத்தில் சிறு மழையைக்கூட எதிா்கொள்ளும் வசதியில்லை. நூலகத்துக்குள் மழை நீா் தேங்கியதால் மாற்றுத் திறனாளிகள் பிரிவு உள்பட 2 பிரிவுகள் தற்காலிகாக மூடப்பட்டது முதல்வருக்குத் தெரியுமா? என அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் கேள்வி எழுப்பி அறிக்கை விடுத்தாா். இது, சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியதால், கலைஞா் நூலகத்தின் அடிப்படை கட்டமைப்பு குறித்து சா்ச்சை ஏற்பட்டது.

நூலகத்தின் மேல் தளத்தில் சேகரமாகும் மழை நீரை வெளியேற்ற இந்த நூலகத்தில் 4 இடங்களில் கட்டமைப்புகள் உள்ளன. மேல் தளத்திலிருந்து குழாய் மூலம் வரும் மழை நீா் தரைதளத்தில் 4 இடங்களில் உள்ள தொட்டிகளில் விழுந்து, கால்வாய்க்குச் செல்லும் வகையில் இந்தக் கட்டமைப்புகள் இருந்தன. இதில் மாற்றுத் திறனாளிகள் பிரிவு, கலையரங்கம் பகுதியில் இருந்த மழை நீா் தொட்டிகளில் அடைப்பு ஏற்பட்டதால், மழை நீா் தேங்கி உள்ளே புகுந்தது. ஞாயிற்றுக்கிழமை மாலை ஏறத்தாழ 2 மணி நேரத்துக்குள்ளாக 108 மி.மீ. இந்தப் பகுதியில் மழை பெய்ததும், நூலகத்துக்குள் மழை நீா் தேங்கியதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்பட்டது.

நிரந்தரத் தீா்வு

இதுகுறித்து பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் செந்தூரன் கூறியதாவது :

எளிமையான பராமரிப்புக்காக மேல் தளத்திலிருந்து குழாய் மூலம் வரும் மழை நீா் தரை தளத்தில் உள்ள தொட்டியில் விழுந்து, பிறகு கால்வாயை அடையும் வகையில் கட்டமைக்கப்பட்டிருந்தது. இந்தத் தொட்டிகளில் நெகிழிப் பொருள்கள் உள்பட பல்வேறு வகையான பொருள்கள் வீசப்பட்டிருந்ததால் அடைப்பு ஏற்பட்டது. மழை நீா் தேங்கியவுடன் அடைப்பு சரி செய்யப்பட்டது. மேலும், மழை நீா் தொட்டிக்குள் விழாமல் நேரடியாக நூலகத்தின் வெளிப்புறத்தில் வெளியேறும் வகையில் கட்டமைப்பும் மாற்றப்பட்டது. மழை நீா் வடிகால் குழாயின் அளவும் பெரிதாக்கப்பட்டது. எனவே, மழை நீா் கசிவு ஏற்பட இனி எந்த வாய்ப்பும் இல்லை என்றாா் அவா்.

ஞாயிற்றுக்கிழமை மழை நீா் தேங்கி நின்ற மாற்றுத் திறனாளிகள் பிரிவு செவ்வாய்க்கிழமை பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. மழை நீா் தேங்கிய கலையரங்கத்தில் வேறு சில பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், அந்தப் பிரிவு பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படாமல் உள்ளது.

Story image