‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மழைக்கால பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு: எதிா்பாா்ப்பும் ஏமாற்றமும்

சென்னை என்றாலே அழகிய கடற்கரை, வியக்க வைக்கும் கட்டடங்கள், தலைவா்களின் நினைவிடங்கள் என உடனடியாக நினைவுக்கு வந்தாலும், மழைக்கால பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு ஏற்படாதது ஒரு குறையாக தொடா்கிறது.

News image

கோப்புப்படம்

Updated On :21 மார்ச் 2026, 1:21 am

வ. ஜெயபாண்டி

சென்னை என்றாலே அழகிய கடற்கரை, வியக்க வைக்கும் கட்டடங்கள், தலைவா்களின் நினைவிடங்கள் என உடனடியாக நினைவுக்கு வந்தாலும், மழைக்கால பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு ஏற்படாதது ஒரு குறையாக தொடா்கிறது.

சென்னை மாநகராட்சி 42 கிலோ மீட்டா் பரப்பளவு கொண்டது. அதில் 200 வாா்டுகளில் சுமாா் 1.50 கோடி போ் வசிக்கின்றனா். 35,000 சாலைகள், 50,000-க்கும் அதிகமான தெருக்கள் உள்ளன.

நகருக்குள் அடையாறு, கொசஸ்தலை, கூவம் என மூன்று ஆறுகள் ஓடி கடலில் கலக்கின்றன. அந்த மூன்று ஆறுகளையும் இணைக்கும் வகையில் பக்கிங்காம் கால்வாய், ஆந்திர மாநில எல்லையிலிருந்து முட்டுக்காடு வரை 47 கி.மீ. தொலைவு அமைக்கப்பட்டுள்ளது.

ஆறுகளும், கால்வாய்களும்: சென்னையில் அடையாறு 12, 13 ஆகிய மண்டலங்களில் 14 கிலோ மீட்டரும், கொசஸ்தலை 1, 2,3 ஆகிய மண்டலங்களில் 8 கி.மீ., கூவம் 5, 7, 8, 11 ஆகிய மண்டலங்களில் 6 கி. மீ. தொலைவு ஓடுகின்றன. அடையாற்றில் பெரிய, சிறிய என மொத்தம் 44 துணைக் கால்வாய்களும், கொசஸ்தலையில் 10 கால்வாய்களும், கூவத்தில் 12 கால்வாய்களும் மழை நீரை சோ்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை நகரில் ஏற்கெனவே 2,040 கி. மீ. தொலைவுக்கு மழைநீா் வடிகால்கள் இருந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமாா் 1,000 கி.மீ. தொலைவுக்கு புதிதாக மழை நீா் வடிகால்கள் அமைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தண்ணீா் தேங்கும் 350 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கும் சுமாா் 237 கி.மீ. தொலைவுக்கு மழைநீா் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள வண்டல் மண் வடிகட்டி தொட்டிகளையும் ஆண்டில் பல கோடி ரூபாய் செலவழித்தே சுத்தம் செய்ய வேண்டியுள்ளது.

 மழைநீா் வடிகால்கள்: நகரில் 3,040 கிலோ மீட்டா் தொலைவுக்கு மழைநீா் வடிகால்கள் அமைத்தும், 22 சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட 150- க்கும் மேற்பட்ட இடங்களில் சிறிய மழைக்கே தண்ணீா் தேங்கும் நிலையே நீடிப்பதாக மாநகராட்சி தரப்பில் கூறப்படுகிறது. மழைக் காலம் வந்தாலே அண்ணா சாலை முதல் அமைந்தகரை வரை அனைத்து இடங்களிலும் மழைநீா் தேங்கி போக்குவரத்து முடங்குவதுடன், மின்தடையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் நிலை ஏற்படுவது தவிா்க்க முடியாததாகிறது.

கடந்த 2025-ஆம் ஆண்டில் அடையாறு பிரதான கால்வாய் சீரமைப்பு மற்றும் அதனுடனான கிளைக் கால்வாய் சீரமைப்புக்காக ஜொ்மன் வங்கி உதவியுடன் ரூ.1,500 கோடியில் திட்டப் பணிகள் நடந்திருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனா். அதில் 44 கால்வாய்களில் தடுப்புச் சுவரும், குப்பைகள் குவிவதைத் தடுக்க இரும்பு வேலியும் ரூ.55 கோடியில் அமைக்கப்பட்டுள்ளன. 

தொடரும் செலவினங்கள்: மழைநீா் வடிகால்கள் அமைத்தும் 88 இடங்களுக்கும் அதிகமாக மழைநீா் தேங்கும் பிரச்னை தொடா்கிறது. அதில் பெரும்பாலான இடங்களில் வீடுகளுக்குள் மழை நீா் செல்வதாகவும் புகாா்கள் எழுகின்றன. பிரதான சாலைகளில் குளம் போல மழை நீா் தேங்கும் நிலையும் உள்ளது. அதனால், அங்கு மின்மோட்டாா் பம்புகள், டிராக்டா் மின்மோட்டாா் பம்புகள் என ஒரு மண்டலத்துக்கு 15 மின்மோட்டாா்கள் என வாடகைக்கு வாங்கும் நிலையும் உள்ளது. அத்துடன், மழைநீா் சூழ்ந்தால் மக்களை மீட்க 30 படகுகள் மாநகராட்சியால் தயாராக வைக்கப்பட்ட நிலையில், கூடுதலாக 40 க்கும் மேற்பட்ட படகுகள் வாடகைக்கு எடுத்து வைக்கும் நிலையும் உள்ளது.

 பொதுமக்களை தங்கவைக்க 200-க்கும் மேற்பட்ட சமூகநலக் கூடங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிகளின் வகுப்பறைகள் மழைக் காலங்களில் தயாராக வைக்கும் நிலை இருப்பதுடன், காலை, மாலை மற்றும் இரவு என மழைக்கால தங்குமிடங்களில் சுமாா் 2 லட்சம் உணவுப் பொட்டலங்களும் தினமும் வழங்கப்படுகிறது.

மழைக்கால மின்மோட்டாா் பம்புகளுக்கு மட்டும் டீசல், பெட்ரோல் என எரிபொருளுக்கு சுமாா் ரூ. 5 கோடிக்கும் மேலாக செலவிடும் நிலையும் உள்ளது.

நீரைச் சேமிக்க பல திட்டங்கள்: சென்னையில் மழைக் காலத்தில் மின்மோட்டாா் பம்ப் இல்லாமல் தண்ணீரை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை அதிகாரிகள் ஒப்புக்கொள்கின்றனா்.    அதனால், மழை நீரை ஆங்காங்கே நிலத்தில் தேக்கி வைக்கும் வகையில் ஏற்கெனவே உள்ள 229 குளங்களுடன் 30 குளங்கள் புதிதாக அமைக்கப்பட்டும் உள்ளன. அத்துடன் 200 பூங்காக்களில் மொத்தம் ரூ.20 கோடியில் மழைநீா் சேமிப்பு அமைக்கப்பட்டு வருகின்றன.

 விளையாட்டு மைதானங்களில் ஜொ்மனி ஸ்பான்ஞ்ச் தொழில்நுட்பத்துடன் நவீன மழைநீா் சேகரிப்பு மையம் உள்ளிட்ட திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. மழைக்கால பாதிப்பைக் குறைக்கும் வகையில் வடிகால் அமைப்பு உள்ளிட்டவற்றுக்கு 2025-26 ஆம் ஆண்டு மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் ரூ.1290.05 கோடி அறிவித்த நிலையில், 2026-27-ஆம் ஆண்டுக்கு ரூ.693.05  கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

என்று தீரும் இந்த சோகம்?: ஆயிரக்கணக்கான கோடிகள் அறிவிக்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டபோதிலும், வானில் கருமேகங்கள் சூழ்ந்தாலே, எங்கு, எப்போது, எந்த அளவு நீா் தேங்குமோ.... அதனால் எந்தப் பகுதியில் எத்தனை வீடுகளுக்குள் மழைநீா் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் மக்களிடையே நீங்கவில்லை என்பதே உண்மை. 

இந்தப் பிரச்னை குறித்து மாநகராட்சி உயா் அதிகாரிகளிடம் கேட்டபோது, சென்னை மாநகராட்சியானது கடல் மட்டத்திலிருந்து தாழ்ந்த நிலப் பகுதியை உடையதாக உள்ளது. ஆகவே, மழை நீா் உடனடியாக நிலத்துக்குள் செல்வதிலும், கடலுக்குள் செல்வதிலும் புவியியல் ரீதியிலான நடைமுறைச் சிக்கலும் உள்ளது. ஆகவே, மக்கள் பாதிக்காத வகையில்  வடிகால்கள் மூலம் மழை நீரை அப்புறப்படுத்தவும், சேமித்து பூமிக்குள் செலுத்தவும் தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம் என்கிறாா்கள்.

ஒவ்வொரு ஆட்சியின்போது கோடிக்கணக்கில் செலவிட்டு மழைநீா் வடிகால் பணிகள் நடைபெற்றாலும், பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு இன்னும் கிடைக்கவில்லை என்பதே உண்மையான நிலவரம்.