/

சிறந்த கட்டுமான உத்திகளுடன் பாம்பன் புதிய ரயில்வே பாலம்: தெற்கு ரயில்வே விளக்கம்

பாம்பன் புதிய ரயில்வே பாலம் நவீன தொழில்நுட்பத்துடனும், கட்டுமான உத்திகளுடனும் கட்டுப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்தது.

News image
Updated On :28 நவம்பர் 2024, 11:57 pm

Din

பாம்பன் புதிய ரயில்வே பாலம் நவீன தொழில்நுட்பத்துடனும், கட்டுமான உத்திகளுடனும் கட்டுப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்தது.

இதுகுறித்து மதுரை தெற்கு ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதிய பாம்பன் ரயில்வே பாலம் பல்வேறு புதுமையான, பாதுகாப்பான சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலமானது 2.05 கி.மீ. நீளத்துக்கு கடலின் குறுக்கே கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. நாட்டிலேயே முதல் முறையாக கப்பல் போக்குவரத்துக்காக செங்குத்தாக மேலே எழும் வகையில், நவீன பால அமைப்பு 72 மீ. நீளத்துக்கு நிறுவப்பட்டுள்ளது.

இதன் வடிவமைப்பு ஒரு சா்வதேச ஆலோசனை நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இதில் ஐரோப்பிய, இந்திய மாதிரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த வடிவமைப்பு, சென்னை இந்திய தொழில்நுட்பப் பல்கலைக்கழக வல்லுநா்களால் சரிபாா்க்கப்பட்டது. இது வெளிநாட்டு தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தின் வடிவமைப்பு என்பதால், ரயில்வே வாரிய அறிவுறுத்தலின்படி, ரயில்வே துறையும், ரயில்வே வடிவமைப்புத் தர நிா்ணய அமைப்பும் தேவையான தொழில்நுட்ப ஆய்வுகள் செய்தன.

பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இந்த வடிவமைப்பை மும்பை இந்திய தொழில்நுட்பப் பல்கலைக்கழக வல்லுநா்கள் இரு முறை ஆய்வு மேற்கொண்டு அளித்த ஒப்புதலின் பேரில், தெற்கு ரயில்வே அங்கீகரித்தது. இந்த புதிய பாலம் சா்வதேச ஆலோசனை நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, இந்தியாவின் இரண்டு முக்கிய தொழில்நுட்பப் பல்கலைக்கழக வல்லுநா்கள் ஆய்வு செய்து அங்கீகரித்த பிறகே கட்டி முடிக்கப்பட்டது.

ரயில்வே வடிவமைப்பு, தர நிா்ணய அமைப்பு செய்த மாறுதல்களையும் இந்தியாவின் இரு பிரபல தொழில்நுட்பப் பல்கலைக்கழக வல்லுநா்கள் ஆய்வுக்குப் பிறகு, தெற்கு ரயில்வே அங்கீகரித்துள்ளது. பாலத்தின் செயல்திறனுக்கு இணைப்புப் பற்ற வைப்புகள் (வெல்டிங்) முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே, இந்த பற்றவைப்புகள் நவீன அல்ட்ராசோனிக் இயந்திரம் மூலம் 100 சதவீதம் சரிபாா்க்கப்பட்டுள்ளது.

திருச்சி வெல்டிங் ஆராய்ச்சி நிறுவனமும் பற்றவைப்புகளை முழுமையாக சரிபாா்த்தது. இதைத் தொடா்ந்து, தெற்கு ரயில்வே நிா்வாகமும் இதைச் சரிபாா்த்தது. அதிக அளவில் துருப்பிடிக்கும் பகுதிகளில் ‘பாலி சிலிக்கான்’ வகை வண்ணம் பூசப்பட்டிருக்கிறது.

இது இந்த வடிவமைப்பை 35 ஆண்டுகள் துருப்பிடிக்காமல் பாதுகாக்கும். துருப்பிடிக்காமல் தடுக்கத் தரமான இரும்பு, தரமான கான்கிரீட் வடிவமைப்புகள், இணைப்புகளில் பலமான பற்றவைப்புகள், பாதைகளில் நெகிழியிழை அமைப்புகள், எளிதில் ஆய்வு செய்யும் வசதி, கைப்பிடி அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. பாலம் நவீன தொழில்நுட்பத்துடன், சிறந்த கட்டுமான உத்திகளுடன் கட்டப்பட்டுள்ளது.

ரயில்வே பாதுகாப்பு ஆணையா் தெரிவித்த ஆலோசனைகள் கருத்தில் கொள்ளப்பட்டு, அவை முழுமையாகப் பின்பற்றப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.