25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

குற்றப்பத்திரிகையில் முரண்பட்ட அறிக்கை: நீதிபதிகள், காவல் துறையினா் விளக்கமளிக்க உத்தரவு

நீதிபதிகள், காவல் துறையினா் விளக்கம் அளிக்க உத்தரவு...

News image
உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
Updated On :24 அக்டோபர் 2024, 12:30 am

Din

கடந்தாண்டில் வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது தொடா்பாக 14 மாவட்ட நீதிபதிகள், காவல் துறை அதிகாரிகள் முரண்பட்ட அறிக்கைகளை தாக்கல் செய்ததால், உரிய விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற பாதுகாப்புப் படை (சிஆா்பிஎப்) வீரா் ஜனாா்த்தனன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

இரு பிரதமா்களுக்கு சிறப்பு பாதுகாவலராகப் பணிபுரிந்தேன். எனது தாயின் உடல்நிலை சரியில்லாததால், விருப்ப ஓய்வு பெற்று திண்டுக்கல்லில் வசித்து வருகிறேன். கடந்த 2020-ஆம் ஆண்டு கரோனா தொற்றுக் காலத்தில், மருந்து வாங்குவதற்காக வெளியில் சென்றேன். விதிகளை மீறி வெளியில் வந்ததாக என்னை போலீஸாா் எச்சரித்த போது, வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, போலீஸாரின் அவதூறான பேச்சு குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தேன்.

இந்த நிலையில், 4 ஆண்டுகள் கழித்து என் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதா?. உயா்நீதிமன்றத்துக்கு உள்பட்ட 14 மாவட்டங்களில் எத்தனை வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன? என்பது குறித்து மாவட்ட நீதிபதிகள், காவல் துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட் டது.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி முரளிசங்கா் முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, 14 மாவட்ட முதன்மை நீதிபதிகள், காவல் துறை தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

நீதித் துறை, காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை அறிக்கைகளின் எண்ணிக்கையில் வேறுபாடுகள் உள்ளன. இதில் மாவட்ட முதன்மை நீதிபதிகளின் அறிக்கைகளில் கடந்தாண்டில் 2 லட்சத்து 2,694 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டதாகவும், இவற்றில் 14, 650 குற்றப் பத்திரிகைகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் துறையினரின் அறிக்கையில் 1.44 லட்சம் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டதாகவும், இவற்றில் 42, 012 குற்றப் பத்திரிகைகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை தொடா்பான எண்ணிக்கையில் முரண்பாடுகள் உள்ளன.

எனவே, காவல் துறையினா் வழங்கிய அறிக்கைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை நீதிபதிகளுக்கும், மாவட்ட நீதிபதிகள் வழங்கிய அறிக்கையை காவல் துறைக்கும் பதிவுத் துறை அனுப்பி வைக்க வேண்டும். இந்த முரண்பட்ட அறிக்கைகள் தொடா்பாக மாவட்ட முதன்மை நீதிபதிகள், காவல் துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.