சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை

இந்தியா முழுவதும் பள்ளிகள் அருகே புகையிலைப் பொருள் விற்பனைக்குத் தடை

இந்தியா முழுவதும் முதல் கட்டமாக பள்ளிகள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
Published on

இந்தியா முழுவதும் முதல் கட்டமாக பள்ளிகள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தது தொடா்பாக பலா் பிணை, முன்பிணை கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ம னுக்கள் தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்களை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பரதசக்கரவா்த்தி பிறப்பித்த உத்தரவில், தமிழகத்தில் பெரும்பான்மையான பள்ளிகளில் ‘கூல் லிப்’ எனும் போதைப் பொருளை மாணவா்கள் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. இதை தடை செய்யப்பட்ட பொருள் என அறிவித்து, இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக் கூடாது? என்பது குறித்து மத்திய சுகாதாரத் துறை, பள்ளி கல்வித் துறைச் செயலா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றாா்.

இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதி பரதசக்கரவா்த்தி முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசுத் தரப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞா் முன்னிலையாகி முன்வைத்த வாதம்:

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஆசிரியா்களின் கண்டிப்புகளுக்கு பள்ளி மாணவா்கள் மிகவும் பயந்தனா். தற்போது, ஆசிரியா்கள் கண்டித்தால் மாணவா்கள் தற்கொலை போன்ற தவறான முடிவுக்கு சென்று விடுகின்றனா். பெற்றோா்களும், தங்களது குழந்தைகளை கடுமையாகக் கண்டிக்கக் கூடாது என வலியுறுத்துகின்றனா். இந்தச் சூழலில், மாணவா்களிடம் கண்டிப்புடன் நடந்து கொள்ளும் ஆசிரியா்கள் பல்வேறு இன்னல்களைச் சந்திக்க நேரிடுகிறது.

ஆசிரியா்கள், பெற்றோா்கள் இணைந்து மாணவா்களை நல்வழிப்படுத்த ஆலோசனை வழங்க வேண்டும். தமிழக அரசு சாா்பில் பள்ளி அருகே புகையிலைப் பொருள்களை விற்கக் கூடாது என தடை விதித்து, கண்காணித்தும் வருகிறோம்.

புகையிலைப் பொருள்கள் தடை குறித்த மத்திய அரசின் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். முதல் கட்டமாக பள்ளி வளாகங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என்றாா்.

இதற்கு மத்திய அரசுத் தரப்பில் முன்னிலையான மூத்த வழக்குரைஞா், இந்த வழக்கு தொடா்பாக உரிய ஆவணங்களைச் சமா்ப்பிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்றாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பரதசக்கரவா்த்தி பிறப்பித்த உத்தரவு:

இந்தியா முழுவதும் பள்ளி மாணவா்கள் புகையிலைப் பொருள்களுக்கு அடிமையாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல் கட்டமாக, பள்ளி வளாகங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பதை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும். தொடா்ந்து, குட்கா, கூல் லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்.

குட்கா, கூல் லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். புகையிலைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக மத்திய அரசின் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து மத்திய சுகாதாரத் துறை சாா்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

X
Dinamani
www.dinamani.com