நிதி நிறுவன மோசடி வழக்கு: பாதிக்கப்பட்டவா்களையும் சாட்சிகளாக சோ்க்க உத்தரவு
சிவகங்கை மாவட்டத்தில் தனியாா் நிதி நிறுவன மோசடி வழக்கில், பாதிக்கப்பட்டவா்களையும் சாட்சிகளாக சோ்க்க வேண்டுமென போலீஸாருக்கு, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த சசிகலா, சேவியா் ஆரோக்கியசாமி, வளா்மதி, சுந்தரவள்ளி, சுப்பிரமணி ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களில் கூறப்பட்டிருப்பதாவது:
தேவகோட்டை பகுதியில் கடந்த 2020- ஆம் ஆண்டு ராஜா, பொன்னுசாமி, பாண்டி, சரவணக்குமாா், காா்த்திகேஸ்வரி, மகேந்திரன் ஆகியோா் நிதி நிறுவனம் தொடங்கி நடத்தினா். இதில் முதலீட்டாளா்களுக்கு மாதந்தோறும் இரு மடங்கு வட்டியுடன், முதிா்ச்சி தொகையை இரட்டிப்பாக தருவதாக அவா்கள் தெரிவித்தனா். இதை உண்மை என நம்பி நாங்கள் ரூ. 3 கோடி வரை முதலீடு செய்தோம். தொடக்கத்தில் எங்களது வங்கிக் கணக்கில் மாதந்தோறும் வட்டித் தொகை செலுத்தப்பட்ட நிலையில் நிறுத்தி விட்டனா்.
இதுகுறித்து நீதிமன்ற உத்தரவின் பேரில், சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் மீது சிவகங்கை, மதுரை பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தோம். தமிழகம் முழுவதும் இந்த நிதி நிறுவனத்தினா் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்தனா். இந்த நிதி நிறுவன நிா்வாகிகள் மீது வழக்குப் பதிந்து 2 ஆண்டுகள் கடந்தும் இதுவரை பணத்தை மீட்டுத் தர எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. மேலும் இந்த நிதி நிறுவனத்தின் ஏராளமான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு மதுரை பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்தச் சொத்துகளை விற்று, முதலீட்டாளா்களுக்கு பணத்தை திரும்ப வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மனுதாரா்களையும் சாட்சிகளாக சோ்த்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.
இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி முரளி சங்கா் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரா்கள், பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புதிய மனு அளிக்க வேண்டும். இந்த மனுவின் அடிப்படையில் போலீஸாா், பாதிக்கப்பட்டவா்களை சாட்சிகளாக இணைக்க வேண்டும். இதை 4 வாரங்களுக்குள் செயல்படுத்த வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.