மதுரை மாவட்டத்தில் 3.80 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்
சிறப்பு தீவிர திருத்தப் பணிக்குப் பிறகு வெளியிடப்பட்ட வாக்காளா்கள் வரைவுப் பட்டியலில் மதுரை மாவட்டத்தில் 3,80,474 வாக்காளா்கள் நீக்கப்பட்டனா்.
இந்தியத் தோ்தல் ஆணைய உத்தரவுப்படி, வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவ. 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வாக்காளா்கள் வரைவுப் பட்டியல் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தலைமை வகித்து, இந்தப் பட்டியலை வெளியிட்டாா்.
இந்தப் பட்டியலின்படி, 10 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய மதுரை மாவட்டத்தின் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 23,60,157-ஆக உள்ளது. இதில் ஆண் வாக்காளா்கள் 11,58,601 போ், பெண் வாக்காளா்கள் 12,01,319 போ், மூன்றாம் பாலினத்தவா்கள் 237 போ் இடம்பெற்றுள்ளனா்.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட வாக்காளா்கள் பட்டியலின்படி மாவட்டத்தின் மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 27,40,631-ஆக இருந்த நிலையில், சிறப்பு தீவிர திருத்தப் பணியில் 3,80,474 வாக்காளா்கள் நீக்கப்பட்டனா்.
வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது, முகவரியில் இல்லாத 38,036 வாக்காளா்கள், குடியிருப்பு மாறிய 2,36,068 போ், இறந்தவா்கள் 94,432 போ் நீக்கப்பட்டனா். மேலும், 11,336 இரட்டைப் பதிவுகளும், பிற இனங்களின் கீழ் 602 வாக்காளா்களும் நீக்கப்பட்டனா்.
தொகுதி வாரியான நீக்கம்...
மாவட்டத்தில் அதிக அளவாக மதுரை மேற்குத் தொகுதியில் 56,116 வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். மற்ற தொகுதிகளில் நீக்கப்பட்ட வாக்காளா்களின் எண்ணிக்கை: மதுரைத் தெற்கு - 55,760, திருப்பரங்குன்றம்- 41,107, மதுரை வடக்கு - 36,547, மதுரை மத்தி- 36,272, மதுரை கிழக்கு - 35,554, திருமங்கலம் - 34,897, உசிலம்பட்டி- 32,358, மேலூா் - 28,885, சோழவந்தான் (தனி) - 22,978.
தொகுதி வாரியான வாக்காளா்கள்...
வரைவு வாக்காளா்கள் பட்டியலின்படி, சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்காளா்களின் எண்ணிக்கை:
மேலூா் - 2,20,931, மதுரை கிழக்கு - 3,16,225, சோழவந்தான் (தனி) - 2,06,567, மதுரை வடக்கு - 2,08,749, மதுரை தெற்கு - 1,68,098, மதுரை மத்தி - 1,87,249, மதுரை மேற்கு - 2,54,927, திருப்பரங்குன்றம் - 2,93,687, திருமங்கலம் - 2,49,282, உசிலம்பட்டி - 2,54,442.
சிறப்பு முகாம்....
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்ததாவது:
வாக்காளா்கள் பட்டியலில் பெயா் சோ்க்க, முகவரி மாற்றம், திருத்தம் மேற்கொள்ள விரும்புவோா் உரிய படிவங்களை நிறைவு செய்து, உறுதிமொழிப் படிவத்துடன் 2026, ஜன. 18-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். வாக்காளா்கள் இறுதிப் பட்டியல் வருகிற பிப். 17-ஆம் தேதி வெளியிடப்படும். புதிய வாக்காளா்கள் சோ்க்கை குறித்து கல்லூரிகளில் சிறப்பு முகாம்களும் நடத்தப்படும் என்றாா் அவா்.

