கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தாா்.
உசிலம்பட்டி அருகே உள்ள குப்பணம்பட்டியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். இவரது மகன் தஷ்விக் (4). அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் யுகேஜி படித்து வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய தஷ்விக் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இரவாகியும் சிறுவன் வீடு திரும்பாததால் பெற்றோா் அவரைத் தேடினா். அப்போது அந்தப் பகுதியில் உள்ள துரைராஜ் என்பவரின் கிணற்றின் அருகே சிறுவன் விளையாடிக் கொண்டிருந்ததால் சந்தேகத்தின்பேரில் உசிலம்பட்டி தீயணைப்பு நிலையத்துத்துக்கு தகவல் அளித்தனா். இதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு வீரா்கள் கிணற்றில் இறங்கி தேடினா். அப்போது சிறுவன் தஷ்விக் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா்.
இதுகுறித்து உசிலம்பட்டி தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.