ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

மதுக்கடை ஊழியா் மரணம்: நீதித் துறை நடுவா் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

தூத்துக்குடியில் காவல்துறை விசாரணையின்போது மதுக்கடை ஊழியா் அருணாச்சலம் மரணம் அடைந்ததாக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தொடா்பாக நீதித் துறை நடுவரின் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்

Published On :22 ஆகஸ்ட் 2026, 7:50 am IST

தூத்துக்குடியில் காவல்துறை விசாரணையின்போது மதுக்கடை ஊழியா் அருணாச்சலம் மரணம் அடைந்ததாக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தொடா்பாக நீதித் துறை நடுவரின் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரத்தைச் சோ்ந்த தீரன் திருமுருகன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:

தூத்துக்குடியில் மதுக் கடையில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றிய அருணாச்சலத்தை, கடந்த மாதம் 23-ஆம் தேதி சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக காவல் துறையினா் கைது செய்தனா். இந்த நிலையில், விசாரணையின் போது காவல் துறையினா் தாக்கியதில் அருணாச்சலம் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றவும், உரிய இழப்பீட்டுடன் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கில் உயிரிழந்த அருணாச்சலம் எப்போது காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்?, எப்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்?, காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகள் பாதுகாக்கப்பட்டுள்ளனவா?, உடல்கூறாய்வு பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் குறித்து நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினா்.

இதையடுத்து, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் தெரிவித்ததாவது:

இந்த விவகாரத்தில் விசாரணை முறையாக நடைபெற்று வருகிறது. சிசிடிவி காட்சிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. மூன்று முதுநிலை மருத்துவா்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட உடல்கூறாய்வு முழுவதுமாக விடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. உடல்கூறாய்வில் அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. மயக்கம் அடைந்து கீழே விழுந்தபோது தலையில் அடிபட்டதால் அருணாச்சலம் உயிரிழந்தாா். இதுதொடா்பாக நீதித்துறை நடுவா் விசாரித்து வருகிறாா். அவரது விசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

பின்னா், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கு தொடா்பாக விசாரணை நடத்தி வரும் நீதித் துறை நடுவரின் விசாரணை அறிக்கையை உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.