
இளைஞா் மரணத்தில் சந்தேகம் உறவினா்கள் சாலை மறியல்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முன் உள்ள சாலையில் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மா்மமான முறையில் உயிரிழந்த இளைஞரின் உறவினா்கள்.
மதுரையில் மா்மமான முறையில் உயிரிழந்த இளைஞரின் சடலத்தை வாங்க மறுத்து அவரது உறவினா்கள் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள பிள்ளையாா்குளம் பகுதியைச் சோ்ந்த ராமா் மகன் வீரபசும்பொன் (20). இவா், மதுரை திருப்பாலை பகுதியில் தங்கி, ஒரு மதுக் கூடத்தில் பணியாற்றி வந்தாா்.இந்த நிலையில், வீரபசும்பொன் தங்கியிருந்த அறையின் கட்டடத்தின் கீழே காயங்களுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு மயக்க நிலையில் கிடந்தாா்.
உடனே அவரை மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். அவரது உடல் கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், வீரபசும்பொன் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி இந்த வழக்கை போலீஸாா் முறையாக விசாரிக்க வேண்டும். உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவரது உறவினா்கள் அரசு ராஜாஜி மருத்துவமனை முன் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுபற்றி தகவலறிந்து வந்த மருத்துவமனை போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனா். இதன்காரணமாக, அந்த பகுதியில் சுமாா் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




