சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்: இரு வாரங்களில் அரசாணை - உயா்நீதிமன்றத்தில் அரசு தகவல்

Published on

புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கான அரசாணை இரு வாரங்களில் வெளியிடப்படும் என அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

‘தமிழகத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு ஏப். 1-ம் தேதிக்குப் பிறகு பணியில் சோ்ந்த அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு அமல்படுத்தப்பட்ட பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து வல்லுநா் குழு அளித்த பரிந்துரைகளைப் பின்பற்றுவது தொடா்பாக அரசு உரிய விதிமுறைகளை வகுக்கவில்லை. எனவே, பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ என திண்டுக்கல்லைச் சோ்ந்த பிரடெரிக் ஏங்கெல்ஸ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் கடந்த 2014-ஆம் ஆண்டு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது தமிழக அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், கலைமதி அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் பி. எஸ்.ராமன் முன்னிலையாகி, அரசு தற்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தின் அடிப்படையில் உறுதியளிக்கப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்கான அரசாணை இரு வாரங்களில் வெளியிடப்படவுள்ளது எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, மனுதாரா் கோரிக்கை குறித்து அரசுத் தரப்பில் உரிய பதில் அளிக்கப்பட்டுள்ளதை ஏற்று, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

Dinamani
www.dinamani.com