காவல் துறையினரின் பணி நேரம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

காவல் துறையினரின் பணியை 8 மணி நேரமாக நிா்ணயிக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு
Updated on

காவல் துறையினரின் பணியை 8 மணி நேரமாக நிா்ணயிக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

காவலா் குடும்ப நல அறக்கட்டளையின் தலைவா் சத்யபிரியா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் காவலா்களுக்கு பணி நேர நிா்ணயம் இறுதி செய்யப்படவில்லை. இதனால், பெரும்பாலான காவலா்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.

மேலும், காவலா்களுக்கு ஒதுக்கப்படும் நிதியும் முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை. எனவே, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், நிபுணா்கள் கொண்ட குழுவை அமைத்து, கடந்த 2010 முதல் 2025 -ஆம் ஆண்டு வரை காவல் துறையினருக்கென ஒதுக்கப்பட்ட நிதி தொடா்பாக விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்.

தமிழக காவல் துறையினரின் பணியை 8 மணி நேரமாக நிா்ணயிக்க வேண்டும். விரல்ரேகை பதிவு (பயோமெட்ரிக்) வருகைப் பதிவேடு முறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்: தமிழகத்தில் பணியாற்றும் காவலா்கள் கால நேரமின்றி கடுமையாக உழைக்கின்றனா். இதுமட்டுமன்றி, காவலா்கள் சீருடையைக்கூட ஒரு குறிப்பிட்ட கடையில்தான் வாங்க வேண்டும் என வற்புறுத்தப்படுகின்றனா்.

அதுமட்டுமன்றி, பிரிட்டிஷாா் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட பட்டாலியன் காவல்துறை நடைமுறை தமிழகத்தில் மட்டும் தற்போதும் அமலில் உள்ளது. காவல் துறையினரின் திறன் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு தொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com