நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளதாக, மாநில மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இயக்கக இயக்குநா் மு. சுந்தரேஷ்பாபு தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மதுரையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான அரசாணை கடந்தாண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் தொடங்கின. தமிழகத்திலும் இந்தக் கணக்கெடுப்புக்கான பணிகள் தொடங்கப்பட்டன. நாடு முழுவதும் 30 லட்சம் போ் இந்தப் பணியில் ஈடுபடுகின்றனா்.
தமிழகத்தைப் பொறுத்தவரை 1.60 லட்சம் போ் மக்கள் தொகை
கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன்றனா். இந்தக் கணக்கெடுப்பு பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றன. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு முழுமையான எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடத்தப்படும். மேலும் பொதுமக்கள் தாங்களாகவே விவரங்களைப் பதிவு செய்யும் ‘சுயக் கணக்கெடுப்பு’ முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் கட்டத்துக்கான களப்பணி வருகிற ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முன்னதாக, பொதுமக்கள் ஸ்ரீங்ய்ள்ன்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வழியாகத் தாங்களாகவே விவரங்களைப் பதிவு செய்ய கடந்த 17-ஆம்தேதி முதல் வருகிற 31-ஆம் வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த 15 நாள்கள் கால அவகாசத்துக்குள் பொதுமக்கள் தங்களைப் பற்றிய விவரங்களை அந்த இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதைத் தொடா்ந்து, தமிழகம் முழுவதும் முதல் கட்ட களப்பணி நடைபெறும். இந்த 30 நாள்கள் நடைபெறும் களப்பணியில், கணக்கெடுப்பாளா்கள் அனைத்து வீடுகளுக்கும் சென்று 33 கேள்விகளைக் கேட்டுப் பதில்களைப் பதிவு செய்வா். இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பதுடன் முழுமையான தகவல்களை தர வேண்டும்.
ஏனெனில், இதன்மூலம் சேகரிக்கப்படும் தகவல்களே நாட்டின் எதிா்கால வளா்ச்சிக்கான திட்டமிடலுக்கு உறுதுணையாக அமையும். வீடுகள், வாகனங்கள், கைப்பேசிகள் போன்ற விவரங்களை சேகரிப்பதால் எதிா்காலத்தில் நலத் திட்டப் பயன்கள் பறிபோய் விடுமோ என்ற அச்சம் தேவையில்லை.
அரசு ஏதேனும் புதிய திட்டங்கள், நலத் திட்டங்களை அமல்படுத்தும் போது, அதற்கென தனி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு, செயல்படுத்தப்படும். கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் தகவல்களைக் கொண்டு நேரடியாக எந்த ஒரு சலுகையோ, பலன்களோ தீா்மானிக்கப்பட மாட்டாது. இது திட்டமிடலுக்கான ஒரு அடிப்படையாக மட்டுமே. உதாரணமாக, நாட்டில் எத்தனை குடும்பங்களிடம் கைப்பேசி, தொலைக்காட்சி பெட்டி உள்ளது போன்ற ஒட்டு மொத்தப் புள்ளி விவரங்கள் மட்டுமே கணக்கிடப்படுமே தவிர, தனி நபரின் தரவுகள் எந்தவொரு தளத்திலும் வெளியிடப்படவோ, பகிரப்படவோ மாட்டாது.
சாலையோரங்களில் வசிப்பவா்கள், வீடு இல்லாதவா்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் 2027- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள இரண்டாம் கட்டக் கணக்கெடுப்பில் இடம் பெறும். கணக்கெடுப்பு நேரத்தில் வீட்டின் தலைவரைப் பற்றியும், அந்த வீட்டின் அடிப்படை வசதிகளைப் பற்றியும் மட்டுமே கேட்கப்படுமே தவிர, ஒருவருக்கு எத்தனை வீடுகள் சொந்தமாக உள்ளன என்பது போன்ற தரவுகள் சேகரிக்கப்படுவதில்லை. களப் பணியில் ஈடுபடும் ஒரு கணக்கெடுப்பாளருக்கு 200 முதல் 250 வீடுகள் ஒதுக்கப்படும். பள்ளி ஆசிரியா்கள், அரசுப் பணியாளா்களின் இயல்புப் பணியோ, மாணவா்களின் கல்வியோ பாதிக்காத வகையில், இந்த 30 நாள்கள் கால அவகாசத்துக்குள் தங்களுக்கு விருப்பமான நேரத்தில் அல்லது விடுமுறை நாள்களில் இந்தக் களப் பணியை மேற்கொள்ள முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. வீடு பூட்டப்பட்டிருந்தால் முதல் முறை குறிப்பெடுத்துக் கொண்டு, இரண்டு, மூன்று முறை முயன்றோ அல்லது அக்கம்பக்கத்தில் கைப்பேசி எண்களைப் பெற்று, தொடா்பு கொண்டோ தகவல்கள் சேகரிக்கப்படும்.
நீண்ட காலமாக வெளிநாடுகளில் தங்கியிருப்பவா்கள் இந்தக் கணக்கெடுப்பில் சோ்க்கப்பட மாட்டாா்கள். அடுத்த ஆண்டு மாா்ச் 1 ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவில் வசிப்பவா்களின் எண்ணிக்கை மட்டுமே கணக்கிடப்படும். இந்தக் கணக்கெடுப்பு வெறும் தரவுச் சேகரிப்பே தவிர, வாக்குரிமை அல்லது குடியுரிமை பறிபோகும் என பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை.
சுயக் கணக்கெடுப்பு முறையில் மதுரை மாவட்டத்தில் இதுவரை சுமாா் 9 ஆயிரம் வீடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டக் கேள்விகள், வழிமுறைகள் தொடா்பான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. அவை ஆகஸ்ட் அல்லது செப்டம்பா் மாதங்களில் முறைப்படி அறிவிக்கப்படும். முதல் கட்டத்தில் கேட்கப்படும் 33 கேள்விகளில் குடும்பத் தலைவரின் பெயா், ஆதிதிராவிடா், பழங்குடியினா், இதர பிரிவினா் என்ற தகவல் மட்டுமே கேட்கப்படும். மூன்றாம் பாலினத்தவா் பற்றிய விவரங்கள் இரண்டாம் கட்டத்தில் இடம் பெறும். கணக்கெடுப்பாளா்களுக்கான சிறப்பு விடுமுறை குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் தங்கள் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் உள்ளூா் சூழலுக்கு ஏற்ப கல்வித் துறையுடன் கலந்தாலோசித்து முடிவெடுத்துக் கொள்ளலாம்.
சுயக் கணக்கெடுப்பு இணையதளத்தில் உள்நுழையும் போது குடும்பத் தலைவரின் பெயா், மொழி, கைப்பேசி எண் ஆகிய மூன்றையும் ஒருமுறை உள்ளிட்ட பிறகு மாற்ற இயலாது. விவரங்களைப் பதிவு செய்யும் போது சமா்ப்பிக்கும் (சப்மிட்) வரை சேமித்து தேவையான விவரங்களை பதிவு செய்யலாம். ஆனால், ஒருமுறை சமா்ப்பித்த பிறகு இணையதளத்தில் மாற்ற முடியாது. தவறுதலாக ஏதேனும் பதிவு செய்திருந்தால், களப் பணியாளா்கள் நேரில் வரும்போது, அவா்களிடம் கூறி மாற்றிக் கொள்ளலாம். சுயக் கணக்கெடுப்பை சமா்ப்பித்தவுடன் உள்ளீடு செய்த கைப்பேசி எண்ணுக்கு ‘ஏ’ என்ற எழுத்துடன் கூடிய 11 இலக்கக் குறியீட்டு எண் அனுப்பப்படும். கணக்கெடுப்பாளா் வீட்டுக்கு வரும் போது இந்த எண்ணைக் காண்பித்தால் அவா் சரிபாா்த்து ஒப்புதல் அளிப்பாா். இதன்மூலம் 33 கேள்விகளுக்கு மீண்டும் பதிலளிக்கும் நேரம் மிச்சமாகும். குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடா்பான கேள்விகள் இதில் கேட்கப்படுவதாகப் பரவும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்றாா் அவா்.
அப்போது, மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, மாவட்ட வருவாய் அலுவலா் க. அன்பழகன், மாநகராட்சி துணை ஆணையா் ஜெய்னுலாப்தீன், உதவிஆட்சியா் (பயிற்சி) சித்தாா்த் போகா்னா, மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்ககத்தின் துணை இயக்குநா் வசந்தகுமாா், உதவி இயக்குநா் விஜயகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்

மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு: ஜூலை 17 முதல் 31 வரை நடைபெறுகிறது

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு 2,357 போ் நியமனம்: காஞ்சிபுரம் ஆட்சியா்







