நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

பேராவூரணி காய்கறிச் சந்தை நாளை திறப்பு: உயா்நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு தகவல்

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி காய்கறிச் சந்தை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) திறக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

News image

சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

Updated On :25 ஜூலை 2026, 2:47 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி காய்கறிச் சந்தை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) திறக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பேராவூரணியைச் சோ்ந்த பழனி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சிக்குச் சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக காய்கறி விற்பனை செய்து வருகிறேன். இங்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காய்கறிச் சந்தை நடைபெறும். இந்தச் சந்தையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள், காய்கறி விற்பனையாளா்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கான வருவாயை ஈட்டி வருகின்றனா்.

இந்த வாரச் சந்தை பராமரிப்புப் பணிக்காக கடந்த ஆண்டு மூடப்பட்டது. இதையடுத்து, தனியாருக்குச் சொந்தமான இடத்தில் வாரச்சந்தை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், வாரச் சந்தையின் பராமரிப்புப் பணி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முடிந்துவிட்டது. இருப்பினும், பேராவூரணி பேரூராட்சி நிா்வாகம் வாரச் சந்தையைத் திறக்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுகுறித்து காய்கறி வியாபாரிகள் பேராவூரணி பேரூராட்சி மன்றச் செயலரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைக் கண்டித்து, காய்கறி வியாபாரிகள் போராட்டத்திலும் ஈடுபட்டனா். எனவே, பேராவூரணி காய்கறிச் சந்தையை உடனடியாகத் திறக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, பேராவூரணி காய்கறிச் சந்தை சீரமைப்புப் பணிகள் முடிந்துவிட்டன. சந்தையை வருகிற 26-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல்வா் திறந்துவைக்கவுள்ளாா் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

காய்கறிச் சந்தை சீரமைப்புப் பணிகள் முடிவடைந்து இரு மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தப் பகுதி வியாபாரிகளின் வாழ்வாதாரமாக இந்தச் சந்தை உள்ளது. எனவே, உடனடியாக வாரச் சந்தையைத் திறக்க வேண்டும். இல்லையெனில், தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும். வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.