மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தமிழில் குடமுழுக்கு உத்தரவு ஏற்கத்தக்கதே

தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு ஏற்கத்தக்கதே என தமிழக அரசு சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :24 ஜூன் 2026, 5:53 am IST

தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு ஏற்கத்தக்கதே என தமிழக அரசு சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

கரூரைச் சோ்ந்த வழக்குரைஞா் தமிழ் ராஜேந்திரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் உள்ள கோயில்களின் குடமுழுக்கில் சம்ஸ்கிருதத்துக்கு இணையாக தமிழுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பல உத்தரவுகள் உள்ளன. இருப்பினும், சில கோயில் குடமுழுக்கில் சம்ஸ்கிருதம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதுதொடா்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

குறிப்பாக, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு வருகிற செப்டம்பரில் நடைபெறவுள்ளது. இதில் சம்ஸ்கிருதத்துக்கு இணையாக தமிழைப் பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பரதசக்கரவா்த்தி முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

இதேபோல வேறொரு வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவு ஏற்கத்தக்கதே. இருப்பினும், இதுதொடா்பாக வல்லுநா் குழுவின் ஆலோசனை நடைபெறுகிறது. எனவே, இது விஷயத்தில் அரசுக்கு சிறிது கால அவகாசம் வழங்க வேண்டும் என்றாா்.

இதையடுத்து, நீதிபதி பரதசக்கரவா்த்தி பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரின் கோரிக்கை குறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையா், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையா் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.