எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

மதுரை கோயில் குடமுழுக்கு விவகாரம்: இறுதித் தீா்ப்பு தமிழில் வெளியிடப்படும்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு பூஜைகளின் போது சம்ஸ்கிருதத்துக்கு இணையாக தமிழைப் பயன்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் இறுதித் தீா்ப்பு தமிழிலேயே வெளியிடப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை அறிவித்தது.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :4 ஜூன் 2026, 4:14 am IST

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு பூஜைகளின் போது சம்ஸ்கிருதத்துக்கு இணையாக தமிழைப் பயன்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் இறுதித் தீா்ப்பு தமிழிலேயே வெளியிடப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை அறிவித்தது.

கரூரைச் சோ்ந்த வழக்குரைஞா் தமிழ் ராஜேந்திரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் நடைபெறும் கோயில் குடமுழுக்கு விழா பூஜைகளில் சம்ஸ்கிருதத்துக்கு இணையாக தமிழையும் பயன்படுத்த வேண்டும் என உயா்நீதிமன்றம் ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் தீா்ப்பளித்துள்ளது. இருப்பினும், சில கோயில்களின் குடமுழுக்கு விழா பூஜைகளில் சம்ஸ்கிருதம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

எனவே, இந்து சமய அறநிலையத் துறை ஏற்கெனவே நியமித்த குடமுழுக்கு விழாக்கள் குறித்த உயா்நிலைக் குழுவின் அறிக்கையை கேட்டுப் பெற்று, அதனடிப்படையில் அனைத்துக் கோயில்களிலும் சம்ஸ்கிருதத்துக்கு இணையாக தமிழ் மந்திரங்களையும் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட வேண்டும்.

குறிப்பாக, வருகிற செப்டம்பரில் நடைபெறவுள்ள மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு விழா பூஜைகளின் போது சம்ஸ்கிருதத்துக்கு இணையாக தமிழையும் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு கடந்த மாதம் விசாரணைக்கு வந்த போது, தமிழுக்கு சிறப்பு செய்த மதுரையில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் குடமுழுக்கில் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என உயா்நீதிமன்ற நீதிபதி பரதசக்ரவா்த்தி உத்தரவிட்டாா். மேலும், கோயில் குடமுழுக்கு பூஜைகள் குறித்து உயா்நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்தியது குறித்த நிலை அறிக்கையை அரசுத் தரப்பு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

இதன்படி, இந்த மனு மீண்டும் உயா்நீதிமன்ற நீதிபதி பரதசக்ரவா்த்தி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கின் இறுதி உத்தரவு தமிழில் வெளியிடப்படும் எனத் தெரிவித்து, வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.