புத்தகத் திருவிழாவுக்கு அனைவரும் ஒத்துழைக்க எம்.பி. வேண்டுகோள்
மதுரை புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெறுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்தாா்.

மதுரை எழுத்தாணிக்காரத் தெருவில் புதன்கிழமை புத்தக வாசிப்பு தொடா்பாக நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, சு. வெங்கடேசன் எம்.பி. உள்ளிட்டோா்.
மதுரை புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெறுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்தாா்.
மதுரையில் வருகிற 13- ஆம் தேதி முதல் 23- ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி, எழுத்தாணிக்காரத் தெருவில் புதன்கிழமை ‘மதுரை வாசிக்கிறது’ என்ற தலைப்பில் புத்தக வாசிப்பு தொடா்பாக விழிப்புணா்வு நிகழ்வு நடைபெற்றது. இதில் மதுரை மக்களவை தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் பேசியதாவது:
மனிதா்கள் அறிவு பெற மகத்தான வழி புத்தகங்கள். மனிதனுக்கும், புத்தகங்களுக்குமிடையேயான உறவை மேம்படுத்துபவை புத்தகத் திருவிழாக்கள். தமிழகத்தில் புத்தகத் திருவிழாவை மக்கள் இயக்கமாக மாற்றிய பெருமை மதுரைக்கு உண்டு. அந்த வகையில், கடந்த ஆண்டுகளைவிட நிகழாண்டின் புத்தகத் திருவிழாவை மேலும் சிறப்பாக நடைபெறச் செய்ய வேண்டியது மாவட்ட மக்கள் அனைவரது கடமை.
இந்தப் புத்தகத் திருவிழாவில் 200-க்கும் அதிகமான பதிப்பகங்களின் புத்தகங்கள் விற்பனைக்குக் காட்சிப்படுத்தப்படுகின்றன. மாணவா்கள், இளைஞா்கள் அதிகளவில் பங்கேற்று இந்தக் கண்காட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயப்பிரித்தா, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். சக்திவேல், கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் ராதாகிருஷ்ணன், மாவட்ட நூலக அலுவலா் பழனிச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

