மதுரை தனியார் நகைக்கடை கொள்ளை வழக்கு: இருவருக்கு நவ. 29 வரை நீதிமன்ற காவல்!
மதுரை தனியார் நகைக்கடை கொள்ளை வழக்கில் யூடியூபர் மீனாட்சி உள்பட இருவருக்கு நவ. 29 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்...

மதுரை தனியார் நகைக்கடை கொள்ளை வழக்கில் யூடியூபர் மீனாட்சி உள்பட இருவருக்கு நவ. 29 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மதுரை பழங்காநத்தம் புறவழிச் சாலையில் உள்ளது தனிஷ்க் நகைக் கடையிலிருந்த ஏறத்தாழ 1875 பவுன் நகைகள் (15 கிலோ) கடந்த வியாழக்கிழமை அதிகாலை கொள்ளையடிக்கப்பட்டன. கடையின் மின்தூக்கி அமைப்புக்காக அமைக்கப்பட்டிருந்த துவாரம் வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர் கொள்ளையில் ஈடுபட்டது கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் கண்டறியப்பட்டன.
இதையடுத்து, மதுரை மாநகரக் காவல் துறை சார்பில், 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கடையிலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை துல்லியமாக போலீஸார் ஆய்வு செய்ததில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே ஓர் மர்ம நபர் மின்தூக்கி துவாரம் வழியாக கடைக்குள் இறங்கி ஒத்திகைப் பார்த்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர், பழங்காநத்தம் அருட்பெருஞ்ஜோதி தெருவைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் நிஷாந்த் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை நிஷாந்தின் வீட்டுக்குச் சென்ற தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை, சோதனைகளை மேற்கொண்டனர்.
நிஷாந்த் ஏற்கெனவே தலைமறைவாகியிருந்த நிலையில், வீட்டிலிருந்த அவரது தந்தையான ஆட்டோ ஓட்டுநர் சுரேஷிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், வியாழக்கிழமை காலை நிஷாந்த் தன்னை அழைத்து ஒரு பையை அளித்ததாகவும், பிறகு அவரே வந்து அந்தப் பையை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, மாடக்குளம் கண்மாய்ப் பகுதியில் ஓா் இளைஞா் தன்னுடைய கருப்பு நிற மழை அங்கி உள்ளிட்ட சில ஆடைகளை தீயிட்டு எரித்துவிட்டு ஆட்டோவில் திரும்பிச் சென்றதாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் பேரில் அங்கு சென்று போலீஸாா் விசாரித்தபோது, தங்க நகைகளை கொள்ளையடித்தது நிஷாந்த் என்பதையும், கொள்ளையடித்தபோது அணிந்திருந்த உடைகளை அவா் தீயிட்டு எரித்ததையும் காவல்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
பின்னர், நிஷாந்தின் தோழியும் மதுரை திருப்பாலையைச் சேர்ந்த யூடியூபருமான மீனாட்சி நாச்சியாரிடம் தனிப் படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அவருக்கும் கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில், கொள்ளையடித்த நகைகளை மாடக்குளம் கண்மாய்ப் பகுதியில் நிஷாந்த் பதுக்கி வைத்திருப்பதாக மீனாட்சி நாச்சியார் தெரிவித்ததையடுத்து, அவரை கண்மாய்ப் பகுதிக்கு அழைத்துச் சென்ற போலீஸார், அங்கு புதைக்கப்பட்டிருந்த தங்க நகைகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து, நிஷாந்தின் தந்தை சுரேஷ், மீனாட்சி நாச்சியாா் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட நிஷாந்தின் தந்தை சுரேஷ் மற்றும் மீனாட்சி ஆகிய இருவரையும் வரும் நவ. 29 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Summary
In the case involving the robbery at a private jewellery store in Madurai, Judicial Magistrate Sangeetha has ordered that two individuals—including YouTuber Meenakshi—be remanded to judicial custody until November 29.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

