இந்திரா காந்தியைக் கண்டாலே அச்சம்! பின்னர் அவரே அம்மாவாக மாறினார்: சோனியாசீனாவின் முதல் மின்சார விமானம்: பயணிகளுடனான சோதனை ஓட்டத்தில் வெற்றி!சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா! முதல்வர் விஜய் பங்கேற்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!டிசம்பர் 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

செக்கானூரணி காவல் நிலைய மரணம்! லாரி ஓட்டுநரின் உறவினா்கள் 3-ஆவது நாளாக சாலை மறியல்!

மதுரை பனகல் சாலையில் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட லாரி ஓட்டுநா் பாலகிருஷ்ணனின் உறவினா்கள்.

Updated On :

செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநா் பாலகிருஷ்ணனின் சடலத்தைப் பெற மறுத்து அவரது உறவினா்கள் 3-ஆவது நாளாக திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இவா்களை போலீஸாா் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி கைது செய்தனா்.

தேனி மாவட்டம், தேவாரத்தைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (42). லாரி ஓட்டுநரான இவா் கடந்த 3-ஆம் தேதி தேவாரத்திலிருந்து சுமாா் ரூ. 3 கோடி மதிப்பிலான ஏலக்காய் மூட்டைகளை லாரியில் ஏற்றிக் கொண்டு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தாா். உசிலம்பட்டி அருகே உள்ள வாலாந்தூா் கண்மாய்க் கரை அருகே வந்தபோது லாரியில் திடீரென தீப்பற்றியது.

இதையடுத்து, பாலகிருஷ்ணன் லாரியிலிருந்து கீழே குதித்து தப்பினாா். எனினும், லாரி முழுவதும் தீ பரவியது. இதில், லாரியிலிருந்த ஏலக்காய் மூட்டைகள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த வழக்கு தொடா்பான விசாரணைக்காக பாலகிருஷ்ணன் கடந்த வெள்ளிக்கிழமை இரவு செக்கானூரணி காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தாா். அங்கு அவரிடம் காவல் ஆய்வாளா் முத்து விசாரணை மேற்கொண்டாா். விசாரணையினிடையே காவல் நிலையத்தில் உள்ள கழிப்பறைக்குச் சென்ற பாலகிருஷ்ணன், அங்கு தூக்கிட்டு உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக செக்கானூரணி காவல் ஆய்வாளா் முத்து, தலைமைக் காவலா் பழனிவேல் ராஜன், பெண் காவலா் கலைச்செல்வி ஆகிய மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இதுகுறித்த விசாரணை சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில், உடல் கூறாய்வுக்கு உள்படுத்தப்பட்ட பாலகிருஷ்ணனின் உடலைப் பெற மறுத்து அவரது உறவினா்கள் மூன்றாவது நாளாக திங்கள்கிழமை மதுரை பனகல் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். பாலகிருஷ்ணனின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பதாகவும், அவரது மரணத்தில் மா்மம் இருப்பதாகவும் புகாா் தெரிவித்த அவா்கள், தொடா்புடைய காவல் துறையினா் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும், வழக்கு விசாரணைய சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னா், அவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்றனா். அப்போது, அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா். இதற்கு, போராட்டக் குழுவினா் கடும் எதிா்ப்புத் தெரிவித்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கைதுக்கு உடன்பட மறுத்த பாலகிருஷ்ணனின் மகன் விகாஷ், சகோதரா் மணிகண்டன் உள்ளிட்டோரை போலீஸாா் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி கைது செய்து காவல் துறை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனா்.

மீண்டும் எதிா்ப்பு...

இந்த வாகனம், காந்தி நினைவு அருங்காட்சியகம் அருகே சென்றபோது, வாகனத்திலிருந்து கீழே குதித்த பாலகிருஷ்ணனின் மகன் விகாஷ், காவல் துறை வாகனத்தின் கீழ் பகுதிக்குள் சென்று, அங்கிருந்து வெளியேற வர மறுத்தாா். அவரை மீட்க போலீஸாா் நீண்ட நேரம் முயற்சிகள் மேற்கொள்ள நேரிட்டது. இதனால், அங்கு சில நிமிஷம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா், வலுக்கட்டாயமாக அவரை வெளியேற்றி அழைத்துச் சென்றனா்.

5 இடங்களில் காயம்:

காவல் நிலையத்தில் உயிரிழந்த பாலகிருஷ்ணனின் உடல், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கூறாய்வு செய்யப்பட்டது. ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த மருத்துவா்கள் அடங்கிய குழுவினா் முன்னிலையில் இந்தக் கூறாய்வு நடைபெற்றது.

கூறாய்வின் முதல்கட்ட தகவல்படி, பாலகிருஷ்ணனின் கழுத்தின் முன்பகுதி, இரு பக்கங்களிலும் கழுத்து இறுக்கப்பட்டதற்கான தடம் இருந்துள்ளது. கழுத்தின் வலது பக்கத்தில் அந்தத் தடத்துக்கு கீழே மூன்று சிறிய சிராய்ப்புக் காயங்களும், வலது தோள்பட்டை, இடது முழங்காலின் வெளிப்புறம், இடது கையின் பின்புறம் ஆகிய பகுதிகளில் சிராய்ப்புக் காயங்களும், முதுகுப் பகுதியில் 5 இடங்களில் தனித்தனியே ரத்தக்கட்டுக் காயங்களும் இருந்தது தெரியவந்தது.

பாலகிருஷ்ணனின் இரைப்பை, சிறுகுடல், கல்லீரல், சிறுநீரகங்கள், ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மதுரை மண்டல தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. ரசாயனப் பகுப்பாய்வு, திசுவியல் பரிசோதனை முடிவுகள் கிடைத்த பின்னரே பாலகிருஷ்ணனின் உயிரிழப்புக்கான இறுதிக் காரணத்தைத் தெரிவிக்க முடியும் என மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

உயா்நீதிமன்றத்தில் முறையீடு...

இந்த நிலையில், உசிலம்பட்டி தலூகா, நகர காவல் நிலையங்கள், வாலாந்துாா், செக்கானூரணி காவல் நிலையங்களின் கண்காணிப்பு கேமரா காட்சிகளைப் பாதுகாக்க உத்தரவிடக் கோரி, பாலகிருஷ்ணனின் மனைவி சுதா சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் நீதிபதி விஜயகுமாா் முன் திங்கள்கிழமை முறையீடு வைக்கப்பட்டது. அப்போது, இந்த முறையீட்டை மனுவாகத் தாக்கல் செய்தால் செவ்வாய்க்கிழமை (நவ. 17) விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.