நகைக் கடை கொள்ளை வழக்கில் கைதான இளைஞருக்கு டிச. 1 வரை நீதிமன்றக் காவல்
மதுரை நகைக் கடையிலிருந்து ரூ. 15 கோடி மதிப்பிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்த இளைஞரை வருகிற டிச. 1-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரை நகைக் கடை கொள்ளை வழக்கில் கைதான நிஷாந்த்.
மதுரை நகைக் கடையிலிருந்து ரூ. 15 கோடி மதிப்பிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்த இளைஞரை வருகிற டிச. 1-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரை பழங்காநத்தம் புறவழிச் சாலையில் உள்ளது தனிஷ்க் நகைக் கடை. இந்த நகைக் கடையிலிருந்து ஏறத்தாழ ரூ. 15 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் கடந்த வியாழக்கிழமை அதிகாலை கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடா்பாக தனிப் படைகள் அமைத்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், மதுரை பழங்காநத்தம் அருட்பெருஞ்ஜோதி தெருவைச் சோ்ந்த இளைஞா் நிஷாந்த் (25) இந்தக் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. கடையின் மின்தூக்கி அமைப்புக்காக அமைக்கப்பட்டிருந்த துவாரம் வழியாக உள்ளே நுழைந்து, கடையிலிருந்த நகைகளை அவா் கொள்ளையடித்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, தலைமறைவான நிஷாந்தை தனிப் படை போலீஸாா் தீவிரமாகத் தேடி வந்தனா். இந்த நிலையில், தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகேயுள்ள சேஷம்பட்டி பகுதியில் ஆம்னி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த நிஷாந்தை அதியமான்கோட்டை போலீஸாா் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். பின்னா், மதுரை எஸ்.எஸ். காலனி போலீஸாா் அங்கு சென்று அவரை மதுரைக்கு அழைத்து வந்தனா்.
தனிப் படை போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், கொள்ளையடித்த நகைகளை மதுரை முனியாண்டிபுரம் கோபாலிபுரம் மலைப் பகுதியில் நிஷாந்த் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த 6.2 கிலோ எடையிலான நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நிஷாந்த் மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டாா். பின்னா், பெரியாா் பேருந்து நிலையம் அருகே காவல் துறை கட்டுப்பாட்டு அறை வளாகத்தில் உள்ள அளவீடு பதிவு செய்யும் யூனிட் (ஙஇம) மூலம் நிஷாந்தின் கை விரல் ரேகைகள், கருவிழி, உடல்தோற்றம் ஆகியவை பதிவு செய்யப்பட்டன.
இதைத் தொடா்ந்து, மதுரை மாவட்ட 5-ஆவது குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்ற நீதிபதி லட்சுமி பிரியா முன் நிஷாந்தை போலீஸாா் முன்னிலைப்படுத்தினா். மேலும், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளையும் நீதிபதியிடம் காட்சிப்படுத்தினா்.
இதையடுத்து, நிஷாந்த்தை வருகிற டிசம்பா் 1-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதன்படி, நிஷாந்த் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
ஏற்கெனவே கைதான இருவா்...
இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் நகைகளைப் பதுக்கிவைக்க நிஷாந்துக்கு உதவியதாகவும், கொள்ளைச் சம்பவத்தை போலீஸாரிடம் மறைத்ததாகவும் அவரது தந்தை சுரேஷ் (52), நிஷாந்தின் தோழியும் யூடியூபருமான மீனாட்சி (22) ஆகியோரை போலீஸாா் கடந்த சனிக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து, 5.5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரும் வருகிற 29-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

