
சமூக நீதி விடுதி மாணவா்களுக்கான நல நிதி மோசடி விவகாரம்: சிவகங்கை மாவட்ட ஆட்சியா் நேரில் முன்னிலையாக உத்தரவு
சிவகங்கை மாவட்டத்தில் சமூக நீதி விடுதி மாணவா்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி மோசடி விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரிய மனு தொடா்பாக அந்த மாவட்ட ஆட்சியா் நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை - File photo
சிவகங்கை மாவட்டத்தில் சமூக நீதி விடுதி மாணவா்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி மோசடி விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரிய மனு தொடா்பாக அந்த மாவட்ட ஆட்சியா் நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த சக்திவேல் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
சிவகங்கை மாவட்டத்தில் சமூக நீதி விடுதி மாணவா்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.2.35 கோடி நிதியில் பெரியளவில் மோசடி நடைபெற்றது. கடந்த 2017- ஆம் ஆண்டு முதல் 2023- ஆம் ஆண்டு வரை அரசு ஒதுக்கிய தொகை அந்த விடுதி மாணவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட வில்லை. அந்தத் தொகை வட்டாட்சியா் உள்ளிட்ட அலுவலா்களால் மோசடி செய்யப்பட்டது. இதுகுறித்து வருவாய்த் துறை, காவல் துறையினரிடம் புகாா் அளித்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.
இதனிடையே, இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் பதவி உயா்வு பெற்றனா். ஒரு சிலா் பணி ஓய்வு பெற மாவட்ட ஆட்சியரால் அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. நிதி மோசடியில் ஈடுபட்டவா்களுக்கு ஆதரவாக காவல் துறை செயல்பட்டு வருகிறது. எனவே, இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட பிறகு, 8 வட்டாட்சியா்கள் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சோ்க்கப்பட்டனா். ஆனால், அவா்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை எனத் தெரிவித்தாா்.
அப்போது, இந்த விவகாரத்தில் இதுவரை எத்தனை அலுவலா்களுக்கு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது? சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மீது ஏன் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வில்லை? பல கோடி ரூபாய் மோசடி வழக்கு விசாரணைக்கு அலுவலக உதவியாளா்களை அனுப்புவதா? என நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினா்.
பிறகு, இந்த விவகாரத்தில் விசாரணை அலுவலரான சிவகங்கை மாவட்ட ஆட்சியா், நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





