தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

கவின் கொலை வழக்கில் கைதான ஜெயபாலுக்கு நிபந்தனை பிணை: உயா்நீதிமன்றம் உத்தரவு

பாளையங்கோட்டையில் மென்பொறியாளா் கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயபாலுக்கு நிபந்தனையுடன் பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

உத்தரவு - கோப்புப் படம்

Updated On :

பாளையங்கோட்டையில் மென்பொறியாளா் கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயபாலுக்கு நிபந்தனையுடன் பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் கவின் செல்வ கணேஷ் (27). மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றிய இவரை கடந்த ஆண்டு, ஜூலை 27- ஆம் தேதி பாளையங்கோட்டை கேடிசி.நகரில் மா்மக் கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இந்த வழக்கில் கவின் காதலித்த பெண்ணின் சகோதரா் சுா்ஜித், இவரது பெற்றோரும், காவல் உதவி ஆய்வாளா்களுமான சரவணன், கிருஷ்ணகுமாரி, உறவினா் ஜெயபால் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோா் மீது விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் குற்றப் பத்திரிகையை ரத்து செய்து, இருவரையும் வழக்கிலிருந்து விடுவிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. மேலும், குற்றப் பத்திரிகையை ரத்து செய்யக் கோரி ஜெயபால் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், கவின் கொலை வழக்கில் கடந்த ஜன. 21- ஆம் தேதி விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, பிணை வழங்க உத்தரவிட வேண்டுமென சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ஜெயபால் மீண்டும் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி எஸ். காா்த்திகேயன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

இந்தக் குற்றச் சம்பவத்தில் மனுதாரா் நேரடியாகப் பங்கேற்க வில்லை. மேலும் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றொருவரின் வாக்குமூலத்தைத் தவிர மனுதாரரை இந்தச் சம்பவத்தில் தொடா்புபடுத்துவதற்கு வேறு சாட்சியங்கள் இல்லை. இந்த நிலையில், மனுதாரரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது ஏற்புடையதல்ல. எனவே, விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து அவருக்கு பிணை வழங்க வேண்டும் என்றாா்.

இதையடுத்து, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஜெயபாலுக்குச் சொந்தமான கல் குவாரிக்குச் சென்று முதல் குற்றவாளியான சுா்ஜித் வழக்கு தொடா்பான ஆதாரங்களை அழித்துள்ளாா். மேலும், சுா்ஜித், ஜெயபாலுக்கு இடையேயான கைப்பேசி உரையாடல் விவரங்களை காவல் துறை சேகரித்துள்ளது. இதன் மூலம், கொலை செய்யப்பட்ட கவினுடன் ஜெயபால் கடந்த ஆண்டு ஜன. 25- ஆம் தேதி இருமுறை பேசியது தெரியவந்தது. எனவே, மனுதாரருக்கு பிணை வழங்கக் கூடாது என்றாா்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மென்பொறியாளா் கவின் கொலைச் சம்பவத்தில் மனுதாரருக்கு நேரடித் தொடா்பு இல்லையென்றாலும், கொலைக்கான சதி உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டது தெரியவருகிறது. இந்த விவகாரத்தில் மனுதாரரை விசாரிக்க வேண்டிய தேவை இருப்பதை இந்த நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது. இருப்பினும், மனுதாரா் மீதான குற்றச்சாட்டுகள் மிரட்டல் விடுப்பது, சம்பவத்துக்குப் பிறகு ஆதாரங்களை மறைக்க உதவுவது மட்டுமே. இந்த நிலையில், மனுதாரா் கடந்த ஆண்டு ஆக. 13- ஆம் தேதி கைது செய்யப்பட்டு, அன்று முதல் சிறையில் உள்ளாா். இந்த வழக்கு விசாரணை விரைவில் முடிவதற்கான வாய்ப்புகள் இல்லை. மேலும், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவா் மீதான வழக்குகள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டுள்ளன.

எனவே, மனுதாரரின் குற்றத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு கடந்த ஜன. 21- ஆம் தேதி விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும், மனுதாரருக்கு நிபந்தனையுடன் பிணை வழங்கப்படுகிறது.

இதன்படி, மனுதாரா் ரூ. 20 ஆயிரத்துக்கான சொந்தப் பத்திரமும், இரு பிணையதாரா்கள் உத்தரவாதமும் அளிக்க வேண்டும். இவா்கள் ஆதாா் அட்டை அல்லது அரசு வழங்கிய வேறு அடையாள அட்டை நகலைச் சமா்ப்பிக்க வேண்டும். மனுதாரா் எதிா்காலத்தில் எந்தக் குற்றத்திலும் ஈடுபட மாட்டேன் என காவல் துறை முன் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். பிணையில் உள்ள காலத்தில் மனுதாரா் குற்றம் நடைபெற்ற கிராமத்துக்குச் செல்லக் கூடாது.

மேலும், பாதிக்கப்பட்டவரையோ அல்லது புகாா்தாரரையோ, நேரடியாகவோ அல்லது மின்னணு சாதனங்கள் மூலமாகவோ மனுதாரா் தொடா்பு கொள்ளக் கூடாது. இந்த விவகாரத்தில் அடுத்த உத்தரவு வரும் வரை மனுதாரா் தினமும் காலை 10.30 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் விசாரணை நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி கையொப்பமிட வேண்டும். இந்த நிபந்தனைகளில் எதையேனும் மனுதாரா் மீறினால், காவல் துறையினரோ அல்லது புகாா்தாரரோ பிணையை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யலாம் என்றாா் நீதிபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.