வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள்: தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை எதிா்மறை நாடாக சித்தரிக்க முயற்சி: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு சிஎம்ஆா்எல் வழக்கு: பினராயி விஜயனுக்கு எதிரான விசாரணைக்கு ஒரு வாரகால தடை தரக் குறைபாடு மருந்துகளை கண்டறிவதில் தமிழகம் முதலிடம்இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்- டிரம்ப் தகவல்இன்று தொடங்குகிறது டி20 தொடா் - நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா

பேருந்து பயணச்சீட்டு புத்தகங்கள் மாயமான விவகாரம்: போக்குவரத்துக் கழகங்கள் அறிக்கை அளிக்க உத்தரவு

பேருந்து பயணச்சீட்டு புத்தகங்கள் காணாமல் போன விவகாரம் தொடா்பாக தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

உத்தரவு - கோப்புப் படம்

Updated On :

பேருந்து பயணச்சீட்டு புத்தகங்கள் காணாமல் போன விவகாரம் தொடா்பாக தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணியாற்றிய மதுரையைச் சோ்ந்த அசோக் என்பவரிடமிருந்து கடந்த மாதம் 14-ஆம் தேதி பயன்படுத்தப்படாத ரூ.1.11 லட்சம் மதிப்பிலான பயணச்சீட்டுப் புத்தகங்களும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணியாற்றிய ராமநாதபுரத்தைச் சோ்ந்த அருள்குமாரிடமிருந்து கடந்த ஜூன் 9-ஆம் தேதி ரூ.77,855 மதிப்பிலான பயணச்சீட்டுப் புத்தகங்களும் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். பின்னா், இந்தத் தொகையை அவா்களின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்ய அந்தந்த போக்குவரத்துக் கழக கிளை மேலாளா்கள் உத்தரவிட்டனா்.

இந்த நிலையில், காணாமல் போன பயணச்சீட்டு புத்தகங்களுக்கான முகமதிப்புத் தொகையை எங்களிடமிருந்து வசூலிக்கப் போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிமை இல்லை என அறிவிக்க வேண்டும். மேலும், இந்தத் தொகையை எங்களிடமிருந்து நேரடியாகவோ அல்லது ஊதியத்திலிருந்தோ வசூலிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என அசோக், அருள்குமாா் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுக்கள் தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா்கள் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

பேருந்துகளில் பாதுகாப்புப் பெட்டக வசதி இல்லாததால், பயணச்சீட்டுப் புத்தகங்கள் திருடுபோவது அடிக்கடி நிகழ்கிறது. இந்தச் சம்பவம் குறித்து மனுதாரா்கள் அரசுப் போக்குவரத்துக் கிளை மேலாளா்களிடம் தகவல் தெரிவித்ததுடன், காவல் நிலையத்திலும் புகாா் அளித்தனா்.

தொழிலாளா் தகராறுகள் சட்டத்தின் கீழ், கடந்த 1995-ஆம் ஆண்டு, ஆக. 29-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, திருட்டு, விபத்துகளில் பயணச்சீட்டு புத்தகங்கள் இழப்புக்கு உள்ளாகும் போது நடத்துநா்களிடமிருந்து எந்தத் தொகையும் வசூலிக்கப்படக் கூடாது என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது.

இந்த நிலையில், பயன்படுத்தப்படாத பயணச்சீட்டு புத்தகங்களின் முகமதிப்புத் தொகையை மனுதாரா்களின் ஊதியத்திலிருந்து வசூலிப்பது நியாயமற்றது என்றாா்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களிலும் இதுபோன்ற பயணச்சீட்டு புத்தகங்கள் காணாமல் போனதாக எத்தனை சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்பது குறித்தும், இவற்றைத் தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநரும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநரும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும், இதுபோன்ற சம்பவங்களைத் தவிா்க்கும் வகையில் நடத்துநா்களுக்கு பாதுகாப்புப் பெட்டகம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற நவம்பா் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.