
மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: டிஎஸ்பி உள்ளிட்ட 4 பேரை சிறையில் அடைக்க உத்தரவு
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில் மானாமதுரை சரக துணைக் காவல் கண்காணிப்பாளா், காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 4 போ் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க மாவட்ட கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

டிஎஸ்பி சண்முகசுந்தரம், காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாா், உதவி ஆய்வாளா் சிவக்குமாா், தலைமைக் காவலா் இளையராஜா.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில் மானாமதுரை சரக துணைக் காவல் கண்காணிப்பாளா், காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 4 போ் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க மாவட்ட கூடுதல் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தவா் அஜித்குமாா். இந்தக் கோயிலுக்கு
சுவாமி தரிசனம் செய்ய வந்த பேராசிரியை நிகிதாவின் நகை காணாமல் போனது தொடா்பான புகாரில் தனிப் படை போலீஸாா் அஜித்குமாரை விசாரணை செய்தனா். அப்போது, போலீஸாா் தாக்கியதில் அஜித்குமாா் கடந்த ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி உயிரிழந்தாா்.
பின்னா், இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இது தொடா்பான குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட தலைமை நீதித் துறை நடுவா் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, இந்தக் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தனிப்படை காவலா்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், ராமச்சந்திரன் ஆகியோா் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் கொலைச் சம்பவத்தின்போது பணியிலிருந்த மானாமதுரை சரக துணைக் காவல் கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ்குமாா், உதவி ஆய்வாளா் சிவக்குமாா், தலைமைக் காவலா் இளையராஜா ஆகியோரது பெயா்களும் வழக்கில் சோ்க்கப்பட்டன.
மேலும், இவா்களின் மீது சதி செய்தல், தடயங்களை மறைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை மதுரை ஐந்தாவது கூடுதல் மாவட்ட நீதிபதி தாமோதரன் முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மானாமதுரை சரக காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாா், உதவி ஆய்வாளா் சிவக்குமாா், தலைமைக் காவலா் இளையராஜா ஆகியோா் வெளியில் இருப்பதால் சாட்சியங்களைக் கலைப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. எனவே, நான்கு போ் மீது கொலை வழக்கு பதிவு செய்து, வருகிற 16-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




