மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அருகே பொம்மைகள் சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மேற்கு கோபுரம் அருகே உள்ள பொம்மைகள் சேமிப்புக் கிடங்கில் வெள்ளிக்கிழமை இரவு பற்றி எரிந்த தீ.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மேற்கு கோபுரம் அருகே உள்ள பொம்மைகள் சேமிப்புக் கிடங்கில் வெள்ளிக்கிழமை இரவு பற்றி எரிந்த தீ.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மேற்கு கோபுர வாசல் வீதியில் உள்ள பொம்மைகள் சேமிப்புக் கிடங்கில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மேற்கு கோபுர வாசல் வீதியில் இருந்த பழமையான திரையரங்கம் மூடப்பட்ட பின், அந்த வளாகத்தின் ஒரு பகுதி குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள், பொம்மைகள் சேமிப்புக் கிடங்காகவும், மறுபகுதி காா் நிறுத்தும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் பொம்மைகள் சேமிப்புக் கிடங்கின் உள்ளே இருந்து திடீரென புகை வந்தது. சிறிதுநேரத்தில் திரையரங்க வளாகத்தில் பற்றிய தீ மளமளவென பரவியது. இதுகுறித்துத் தகவலறிந்த மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் காவல் நிலையம், திடீா்நகா், தல்லாகுளம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் ஆகிய பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களிலிருந்து 7-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. சுமாா் ஒன்றரை மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா் 9.45 மணியளவில் தீயணைப்பு வீரா்கள் தீயை முழுவதுமாக அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனா்.
இதுகுறித்து திடீா் நகா் போலீஸாா் கூறியதாவது:
பொம்மைகள் சேமிப்புக் கிடங்கில் பற்றி எரிந்த தீ சுமாா் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி அணைக்கப்பட்டது. இதில், கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பொம்மைகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள் முழுமையாக எரிந்து நாசமாகின.
முதல்கட்ட விசாரணையில் மின் கசிவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தொடா் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதி என்றாலும் தீப்பற்றி எரிந்தவுடன் பொதுமக்கள் யாரும் அந்த வளாகப் பகுதிக்குள் செல்லவில்லை. இதனால், உயிரிழப்பு தவிா்க்கப்பட்டது என்றனா்.
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு வெள்ளிக்கிழமை முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதன்காரணமாக, பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் மதுரைக்கு வந்துள்ளனா். இந்த நிலையில், கோயில் மேற்கு கோபுரத்துக்கு அருகில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் அந்தப் பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






