பரமக்குடியில் பறக்கப்போவது யார் கொடி?

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி 1967இல் தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்டது. அன்று முதல் இதுவரை நடைபெற்ற தேர்தலில் திமுக 3 முறையும், அதிமுக 6 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றிபெற்றுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி 1967இல் தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்டது. அன்று முதல் இதுவரை நடைபெற்ற தேர்தலில் திமுக 3 முறையும், அதிமுக 6 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றிபெற்றுள்ளது.

இத்தொகுதியில் தலித் சமூகத்தினரின் பெரும்பான்மையாக இருந்தாலும், முக்குலத்தோர், யாதவர், செளராஷ்டிரா, செட்டியார் சமூகத்தினரும் உள்ளனர்.

தற்போது நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பாமக போன்ற பிரதான கட்சி வேட்பாளர்கள் 8 பேரும், சுயேச்சை வேட்பாளர்கள் 7 பேர் என மொத்தம் 15 பேர் போட்டியிடுகின்றனர். இதில், அதிமுக வேட்பாளர் டாக்டர் எஸ்.முத்தையா, திமுக வேட்பாளர் உ.திசைவீரன் ஆகியோருக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

அதிமுக வேட்பாளரின் பலம், பலவீனம்: இத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட பலமுறை முயற்சி செய்து தற்போது "சீட்' வாங்கியுள்ளார் டாக்டர் எஸ். முத்தையா. கட்சியினரின் ஒருமித்த ஆதரவுடன் களம் இறங்கியுள்ள இவர் மாவட்ட மருத்துவ அணி செயலாளராக இருந்து அதிக ஈடுபாட்டுடன் கட்சிப் பணியாற்றியவர். இவருக்காக தீவிரமாக களப்பணியில் ஈடுபடும் கட்சி நிர்வாகிகள் இவருடைய பலம், கடந்த 5 ஆண்டுகால அரசின் நலத்திட்டங்கள் இவருக்கு கூடுதல் பலம். இவருக்கு தேர்தல் களம் என்பது புதிது. ஆகையால், கட்சியினரின் ஆலோசனையை கேட்டே ஒவ்வொன்றும் செய்வது இவரது பலவீனம்.

திமுக வேட்பாளரின் பலம், பலவீனம்: திமுக வேட்பாளர் உ. திசைவீரன் ஏற்கெனவே சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து பரமக்குடி ஒன்றியக்குழு தலைவர் பதவி, மக்களிடம் நன்கு அறிமுகமானவர் என்பதும், கட்சியின் சின்னம்,தலித் மக்களின் வாக்கு என்பதும் இவரது பலம். தனது 20 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் பதவியில் இருந்தபோது கட்சியினருக்கோ, அந்த ஒன்றியத்தைச் சேர்ந்த மக்களுக்கோ எந்த உதவியும் செய்யாமல் இருந்தவர் என்பது இவரது பலவீனம்.

மக்கள்நலக் கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் ம.இருளனுக்காக கூட்டணிக் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபடாமல் இருப்பது பெருத்த ஏமாற்றமாகவே உள்ளது.

பாஜக வேட்பாளராக பொன்.வி.பாலகணபதி அறிவிக்கப்பட்டவுன் பரமக்குடி தொகுதியில் மும்முனைப் போட்டி என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால், அதுக்கு மாறாக அவரது பிரசாரப்பயணம் எதிர்பார்த்தபடி சூடுபிடிக்கவில்லை. கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சியினரின் வாக்குகளை பெற்றால் மட்டும் போதும் என்பது போல் உள்ளது இவரது தேர்தல் பணி.

ஆகவே, பரமக்குடி தொகுதியை தக்கவைக்க அதிமுகவும், அவர்களிடமிருந்து தட்டிப் பறிக்க திமுகவும் தயாரக உள்ளது. பரமக்குடிய தொகுதியில் யார் வெற்றிபெற்று தங்களது கட்சிக் கொடியை பறக்கவிடுவது என்பது வாக்காளர்களின் விரலில் தான் உள்ளது.

-கே. தத்து

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com