ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டக் கோரிக்கை
ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தேர்தல்பிரிவு, நிலஅளவைத்துறை, வட்ட வழங்கல் அலுவலகம், சார்நிலைக் கருவூலம், சமூகப் பாதுகாப்புத்திட்ட வட்டாட்சியர் அலுவலகம், ஆதார் அட்டை வழங்கும் மையமும் உள்ளன. இந்த அலுவலகங்களில் சுமார் 250-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களும் புதிய கட்டடத்தில் இயங்கி வருகின்றன. ராமநாதபுரத்திலிருந்து அண்மையில் பிரிக்கப்பட்ட கீழக்கரை, திருவாடானை வட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட ஆர்.எஸ்.மங்கலத்துக்கு புதிய வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களும் புதிய கட்டடத்தில் இயங்கி வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தின் தலைநகரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் மட்டும் மிகவும் பழைமையான ஓட்டுக் கட்டடத்தில் இயங்கி வருகிறது.
பழமையான கட்டடமாக இருப்பதால் இங்கு பணிபுரிவோருக்கும், வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து செல்லும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக வருவாய்த்துறை அலுவலர் சங்கமும் புகார் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலர் சங்க ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் எஸ்.பழனிக்குமார் கூறியது:
ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அடிக்கடி சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வருவோரும், அங்கு போதுமான வசதி இல்லாததால் அருகில் உள்ள வட்டாட்சியர் அலுவலக வாயிலிலேயே காத்திருக்கின்றனர். கழிப்பறைகளில் மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. எனவே, ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து வருவாய்த்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியது:
ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகம் மிகவும் பழைமையான கட்டடத்தில் இயங்கி வந்தாலும், கட்டடம் உறுதியாக தான் உள்ளது. ஆண்டுதோறும் மார்ச் மாதம் மராமத்துப் பணிகளை செய்து வருகிறோம். புதிய கட்டடம் கட்ட ரூ.2.95 கோடிக்கு மதிப்பீடு தயார் செய்து, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு உத்தரவு வந்தவுடன் புதிய கட்டடம் கட்டப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

