
வெளி மாநிலங்களுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க கோரிக்கை
ராமேசுவரத்தில் மீன்பிடித் தொழில் கேள்விக்குறியாகி விட்டதால், வெளிமாநிலங்களுக்கு செல்லும் மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு
ராமேசுவரத்தில் மீன்பிடித் தொழில் கேள்விக்குறியாகி விட்டதால், வெளிமாநிலங்களுக்கு செல்லும் மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பாக். ஜலசந்தி கடல் பகுதியில் உள்ளது ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம். இது ஆண்டுதோறும் மீன்பிடிக்க ஏற்ற துறைமுகமாக இருந்து வந்தது. மீனவர்களுக்கு போதிய அளவில் மீன்கள், இறால்மீன் கிடைத்ததால் குறைவின்றி வருவாய் கிடைத்து. மேலும் கடல் வளத்தை பாதுகாக்க இரட்டைமடி, சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்தது. இதனால் கடல் வளம் பாதுகாக்கப்பட்டது. ஆனால் ஒரு சில விசைப்படகு உரிமையாளர்கள், அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கடல் வளத்தை அழிக்கும் இரட்டைமடி, சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கத் தொடங்கினர். இதில் சில விசைப்படகு மீனவர்கள் மட்டுமே அதிகளவில் மீன் பிடிப்பதால், மற்ற படகுகளுக்கு போதிய அளவு மீன்கள் கிடைக்கவில்லை.
இதனால் கடல் வளத்தை அழிக்கும் இதுபோன்ற வலைகளை தடை செய்ய வேண்டும் என மீனவர்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் இதற்கு மீன்வளத்துறையினர் செவிசாய்க்கவில்லை. இதன் விளைவாக 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இந்த வலைகளை பயன்படுத்தும் வகையில் தங்களது விசைப்படகுகளை பெரிய அளவில் மாற்றியமைக்க தொடங்கினர். மேலும் அதிக குதிரைத்திறன் கொண்ட இயந்திரங்களையும் பொருத்தினர். இதனால் நாள் ஒன்றுக்கு விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டும் என்றால் 500 லிட்டர் முதல் 600 லிட்டர் வரை டீசல் தேவை ஏற்பட்டது. இதனால் விசைப்படகை இயக்க குறைந்தபட்சமாக ரூ.50 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டிய நிலைக்கு மீனவர்கள் தள்ளப்பட்டனர். இதில் பெரிய விசைப்படகுகள் மட்டும் போதிய அளவிற்கு வருவாய் ஈட்டி வந்தன. ஆனால் சிறிய விசைப்படகுகள் அவற்றுடன் போட்டி போட்டு படகுகளை இயக்க முடியவில்லை. இதனால் பெரும்பாலான மீனவர்கள் விசைப்படகுகளை இயக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இந்நிலையில், இலங்கை மீனவர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி மீன்பிடிக்க தொடங்கினர். இதனால் கச்சத்தீவு வரை இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்க வருகின்றனர். இவர்களுக்கு பாதுகாப்பாக அந்நாட்டு கடற்படை கப்பல்களை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் எல்லை தாண்டும் ராமேசுவரம் மீனவர்களை கைது செய்யத் தொடங்கினர். இந்த அச்சம் காரணமாகவும் ராமேசுவரம் மீனவர்கள் கச்சத்தீவு பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல முடியவில்லை. இதன் காரணமாக இங்குள்ள மீனவர்கள் வெளிமாநிலங்களுக்கு மீன்பிடிக்க செல்லத் தொடங்கினர். அவ்வாறு வெளி மாநிலங்களுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. கடந்த வாரத்தில் தங்கச்சிமடம், பாம்பன் மீனவர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒரு சில மீனவர்களின் நலன்களுக்காக மீன்வளத்துறையினர் மீன்பிடிப்பை முறைப்படுத்தாமல் விட்டதால், ராமேசுவரத்தில் மீன்பிடி தொழில் கேள்விக்குறியாகி விட்டது என மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே மீன்பிடித் தொழிலை ஒழுங்குப்படுத்தி மீன்பிடிக்க ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






