ராமநாதபுரத்தில் புதன்கிழமை பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
ராமநாதபுரம் அருகே தேவிபட்டினத்தில் உள்ள கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், ஈஸ்ட் கோஸ்ட் சுழற் சங்கமும் இணைந்து இப்பேரணியை நடத்தின. ராமநாதபுரம் அரண்மனை முன்பிருந்து பேரணியை டி.ஐ.ஜி.என்.காமினி கொடியசைத்து தொடக்கி வைத்தார். தொடக்க நிகழ்வில் சுழற்சங்கத் தலைவர் ஜெ.தினேஷ்பாபு தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் கே.கணேசபாண்டியன், இந்திய மருத்துவக் கழகத்தின் தலைவர் மருத்துவர் தி.அரவிந்தராஜ், வர்த்தக சங்கத் தலைவர் பா.ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் முன்னாள் ஆளுநர் பி.ஆறுமுகப்பாண்டியன் பிளாஸ்டிக் ஏற்படுத்தும் தீமைகள் குறித்து விரிவாக விளக்கி பேசினார்.
பேரணியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மேலாளர் குணசேகரன்,சுழற் சங்க முன்னாள் தலைவர் ஜெ.சுகுமார், ராஜாராம் பாண்டியன் ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து வழிவிடு முருகன் கோயில் முன்பாக நிறைவு பெற்றது.சுழற் சங்க துணை ஆளுநர் ஆர்.வி.எஸ்.பார்த்தசாரதி வரவேற்று பேசினார். சுழற் சங்க செயலாளர் எம்.பாபு நன்றி கூறினார்.