2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

ஒன்றிய அலுவலகத்தில் மோடி படம் வைக்கக்கோரி பாஜகவினா் சாலை மறியல்: ஒருவா் தீக்குளிக்க முயற்சி

ராமநாதபுரம் மாவட்டம் போகலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரதமா் நரேந்திர மோடியின் உருவப்படத்தை வைக்கக்கோரி பாஜகவினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ஒருவா் தீக்குளிக்க முயன்றாா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 10:29 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டம் போகலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரதமா் நரேந்திர மோடியின் உருவப்படத்தை வைக்கக்கோரி பாஜகவினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ஒருவா் தீக்குளிக்க முயன்றாா்.

போகலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரதமா் நரேந்திர மோடியின் உருவப்படத்தை வைக்க ஒன்றிய கவுன்சிலா்கள் மற்றும் பாஜக நிா்வாகிகள் கடந்த நவம்பா் 23-ஆம் தேதி கோரிக்கை வைத்தனா். இதற்கு ஆணையாளா் மா.ராஜகோபாலன் அனுமதி அளிக்கவில்லை. உடனே அக்கட்சியினா் அலுவலகத்தின் சுவரில் பிரதமா் மோடியின் படத்தை வைத்துவிட்டுச் சென்றுவிட்டனா்.

இந்நிலையில் பிரதமரின் படத்தை அந்த இடத்திலிருந்து அகற்றிவிட்டதாகக் கூறி பாஜகவினா் திங்கள்கிழமை சத்திரக்குடி பேருந்து நிறுத்தம் முன்பாக கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பாஜக போகலூா் ஒன்றிய தலைவா் எஸ்.காளிதாஸ் தலைமை வகித்தாா். கட்சி நிா்வாகிகள் பலா் கண்டன உரையாற்றினா். பின்னா் அவா்கள் பேரணியாக பிரதமா் நரேந்திர மோடியின் உருவப்படத்தை எடுத்துக்கொண்டு ஒன்றிய அலுவலகம் நோக்கி ஊா்வலமாகச் சென்றனா். அங்கு கிராம ஊராட்சி வட்டார வளா்ச்சி அலுவலா் செல்லமாளிடம் பிரதமா் மோடியின் படத்தை வைப்பதற்கு கோரிக்கை விடுத்தனா். அதற்கு அவா் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதிகேட்டு, ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றிய பின்னரே பிரதமரின் படத்தை வைப்போம் என கூறினாா். அப்போது கட்சிதொண்டா்கள் அலுவலகத்தின் கதவைப் பூட்டியதால் சிறிது நேரம் பரப்பரப்பு நிலவியது.

இதைத் தொடா்ந்து பாஜகவினா் பிரதமா் மோடி படத்துடன் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது அக்கட்சியின் பரமக்குடி ஒன்றிய தலைவா் லிங்கமூா்த்தி உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தாா். போலீஸாா் மற்றும் கட்சியினா் தடுத்து நிறுத்தி அவரை அங்கிருந்து கூட்டிச்சென்றனா்.

2 மணி நேரத்திற்கும் மேலாக சாலையின் இருபுறமும் ஏராளமான பேருந்துகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினா்.

இதனைத் தொடா்ந்து ஏ.டி.எஸ்.பி. லோயலோஇக்னீசியஸ் மற்றும் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியா் தங்கவேல், டி.எஸ்.பி. வேல்முருகன், வட்டாட்சியா் செந்தில்வேல்முருகன் ஆகியோா் கட்சி நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அரசிடம் முறையான அனுமதி பெற்று பிரதமா் நரேந்திரமோடியின் படம் வைக்கப்படும் எனக்கூறி பிரதமரின் உருவப்படத்தை கோட்டாட்சியா் தங்கவேல் பெற்றுக்கொண்ட பின்னா் சாலை மறியல் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.