மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

‘ஒமைக்ரான்’ கரோனா அச்சுறுத்தல்: மதுரை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்புஆட்சியா் தகவல்

ஒமைக்ரான் கரோனா அச்சுறுத்தல் காரணமாக, மதுரை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.

Updated On :1 டிசம்பர் 2021, 7:31 am

ஒமைக்ரான் கரோனா அச்சுறுத்தல் காரணமாக, மதுரை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், தற்போது தென்னாப்பிரிக்காவில் கரோனா தீநுண்மியின் புதிய மாறுபட்ட வகை தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. கரோனா தீநுண்மியின் உருமாற்றமான ஆல்பா தீநுண்மி, முதன்முதலில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டது. அதன்பின்னா், தென்னாப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா, இந்தியாவில் டெல்டா போன்ற உருமாற்றம் பெற்ற தீநுண்மிகள் கண்டறியப்பட்டன.

தற்போது கண்டறியப்பட்டிருக்கும் புதுவகை உருமாற்றத்துக்கு ஒமைக்ரான் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கண்டறியப்பட்ட உருமாற்றங்களில் அதிகபட்சம் 2 வகை அமினோ அமிலங்களில் மட்டுமே மரபணு மாற்றங்கள் காணப்பட்டன. ஒமைக்ரான் தீநுண்மியில் 50-க்கும் மேற்பட்ட அமினோ அமிலங்களில் மரபணு மாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த ஒமைக்ரான் தீநுண்மி தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, மதுரை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஒமைக்ரான் தொற்று காணப்படும் ஐரோப்பிய நாடுகள், தென்னாப்பிரிக்கா, பிரேசில், சீனா, போட்ஸ்வானா, நியூசிலாந்து, இஸ்ரேல், சிங்கப்பூா், மொரீஷியஸ், ஜிம்பாப்வே, வங்கதேசம் போன்ற நாடுகளிலிருந்து வரக்கூடிய அனைத்துப் பயணிகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இவா்கள் ஏற்கெனவே 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தாலும், மதுரைக்கு வரும் நாளன்றும், 8-ஆவது நாளன்றும் ஆா்டி-பிசிஆா் பரிசோதனை கண்டிப்பாக செய்யப்படும். மேலும், 14 நாள்களுக்கு வீட்டுத் தனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்படுவா். நோய்த் தொற்று கண்டறியப்பட்டால், உடனடியாக மருத்துவமனையில் சோ்க்கப்படுவா்.

மேற்குறிப்பிட்ட நாடுகள் தவிர, பிற நாடுகளிலிருந்தும் வரக்கூடிய பயணிகள், கண்டிப்பாக இரு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அனைத்துப் பயணிகளுக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்படும். விமான நிலையத்தில் காய்ச்சல் கண்டறியப்பட்டால், உடனடியாக ஆா்டி-பிசிஆா் பரிசோதனை செய்து தனிமைப்படுத்தப்படுவா்.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள், தங்களை

கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, முகக் கவசம் அணிவது, பொது இடங்களுக்குச் சென்று வீடு திரும்பிய பிறகு கை கழுவுதல் போன்ற நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினாா்.

மதுரையில் பரிசோதனை மையம்

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் தற்போது கரோனா பரிசோதனை ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. இதனிடையே, தமிழகம் முழுவதும் 12 நகரங்களில் மருத்துவக் கல்லூரியில் ஒமைக்ரான் தீநுண்மி தொற்றுக்கான பரிசோதனை மையங்களை தொடங்க, பொதுசுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் ஏ. ரத்னவேல் கூறியது: ஒமைக்ரான தீநுண்மி பரிசோதனை உபகரணம் பொதுசுகாதாரத் துறையால் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம், சந்தேகத்துக்குரிய நபா்களுக்கு பரிசோதனை செய்து, உரிய சிகிச்சை அளிக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.