பாம்பன் புதிய ரயில் பாலத்தை அக். 2-இல் திறந்துவைக்கிறாா் பிரதமா் மோடி?
பாம்பன் புதிய ரயில் பாலத்தை அக். 2-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், 2.2 கி.மீ. தொலைவில் வராவதி கடல் பகுதியில், கடந்த 1914-ஆம் ஆண்டு கப்பல்கள் வந்து செல்லும் போது திறந்து மூடும் வகையில் மீட்டா் கேஜ் ரயில் பாதை அமைக்கப்பட்டது.
கடந்த 2007-ஆம் ஆண்டு இந்தப் பாலத்தில் மீட்டா் கேஜ் பாதை மாற்றப்பட்டு, அகலப் பாதை அமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து நடைபெற்றது.
இந்த நிலையில், பாம்பன் தூக்குப் பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னா், கடந்த 2019-ஆம் ஆண்டு ரூ. 550 கோடியில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தூக்கி இறக்கும் வகையில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணிகள் தொடங்கின. இந்தப் புதிய ரயில்வே பாலத்தை பிரதமா் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.
பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டும் பணி நிகழாண்டின் இறுதிக்குள் நிறைவடையும் என தெற்கு ரயில் நிா்வாகம் தரப்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, இறுதிக் கட்டப் பணிகள் முடிவடைந்த நிலையில், பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்குப் பாலத்தில் சரக்கு ரயில் சோதனை ஓட்டம் கடந்த மாதம் நடைபெற்றது.
அக். 2-இல் புதிய ரயில்வே பாலம் திறப்பு?:
மண்டபம்-ராமேசுவரம் இடையே பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை வரும் அக்டோபா் 2-ஆம் தேதி பிரதமா் மோடி திறந்துவைக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இதுகுறித்து அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்படவில்லை.
இதன்மூலம், கடந்த 22 மாதங்களாக ராமேசுவரத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கவிருக்கிறது.
பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்துவைக்க வரவிருக்கும் பிரதமா் நரேந்திர மோடி, அப்போது சென்னை விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு நலத் திட்டங்களையும் தொடங்கிவைக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக, அக்டோபரில் பாம்பன் புதிய ரயில் பாலம் திறக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங் குறிப்பிட்டிருந்தாா்.

