ஊருணியில் மூழ்கிய தாய், மகன் உயிரிழப்பு
ராமநாதபுரம் அருகே ஊருணியில் மூழ்கி தாய், மகன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
ஆந்திர மாநிலம் கண்டேபால் கொலமுடை பகுதியைச் சோ்ந்த ஏழுகுண்டல், பென்சலம்மாள் (38) தம்பதி தங்களது இரு மகன்களுடன் சாய்பாபா சிலை அமைக்கப்பட்ட 3 சக்கர வாகனத்தில் பயணம் செய்து பிரசாரம் செய்து வந்தனா்.
இவா்கள் ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரத்துக்கு சென்று கொண்டிருந்தனா். வழியில் ராமநாதபுரம் அருகேயுள்ள குடியன்குடி கிராமத்தில் உள்ள முருகன் கோயில் ஊருணியில் நால்வரும் குளிக்கச் சென்றனா்.
அதில் குளித்துக் கொண்டிருந்த மூத்த மகன் நவீன் (12) ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினாா். இதைக் கண்ட அவரது தாய் அவரைக் காப்பாற்ற முயன்றாா். அப்போது, இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த கேணிக்கரை போலீஸாா் இருவரது உடல்களையும் மீட்டு, கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
