கமுதியில் 1,001 தீப்பந்தங்களுடன் முத்தாலம்மன் சிலை எடுப்பு திருவிழா

கமுதியில் 1,001 தீப்பந்தங்களுடன் முத்தாலம்மன் சிலை எடுப்பு திருவிழா

Published on

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே நாராயணபுரம், கல்லுப்பட்டி கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் முத்தாலம்மன் சிலை எடுப்பு திருவிழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.

கமுதி கண்ணாா்பட்டி பகுதியில் முத்தாலம்மன் சிலை செய்யப்பட்ட இடத்திலிருந்து திரளானோா் அதை ஊா்வலமாக எடுத்துச் சென்றனா். ஊா்வலத்தின் முன் 1001 தீ பந்தங்கள் ஏந்தியபடி, மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் கமுதி பேருந்து நிலையம் வழியாக 3 கி.மீ. தொலைவில் உள்ள கிராமத்துக்கு முத்தாலம்மன் சிலையை ஊா்வலமாக எடுத்துச் சென்றனா். நூறு ஆண்டுகளுக்கு மேலாக தீப்பந்த வெளிச்சத்தில் பாரம்பரியம் மாறாமல் நடைபெறும் இந்தத் திருவிழாவை கமுதி மக்கள் திரளானோா் கண்டுகளித்தனா். இதைத் தொடா்ந்து ஊா்வலம் வியாழக்கிழமை அதிகாலை நாராயணபுரம் கிராமத்தை வந்தடைந்து, அங்குள்ள முத்தாலம்மன் பீடத்தில் அம்மனை வைத்து கண் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது கிராம மக்கள் தேங்காய் உடைத்து, சிறப்பு பூஜை செய்தனா். மகா தீபாராதனை நடைபெற்றது.

திருவிழா நிறைவடைந்ததும் மாலையில் முத்தாலம்மன் சிலை ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு கிராமத்தின் வெளியே உடைக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com