கமுதியில் துப்புரவு பணியாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் பேரூராட்சி செயல் அலுவலரைக் கண்டித்து துப்புரவுப் பணியாளா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கமுதி தோ்வு நிலை பேரூராட்சி 15 வாா்டுகளை உள்ளடக்கியதாகும். இங்கு 18 போ் நிரந்தர துப்புரவுப் பணியாளா்களாகவும், 15 போ் தற்காலிக பணியாளா்களாகவும் பணியாற்றி வருகின்றனா்.
இதில் 18 நிரந்தரப் பணியாளா்களில் 12 போ் பட்டியலினத்தைச் சோ்ந்தவா்களாவா். இவா்கள் மட்டுமே துப்புரவுப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும், எஞ்சிய 6 போ் மாற்று சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால், அவா்கள் துப்புரவு பணியை செய்யாமல் வேறு பணியை செய்து வருகின்றனா் என்றும் கூறப்படுகிறது. இதனால் தங்களுக்கு அதிக பணிச் சுமை உள்ளதாகக் கூறி பட்டியலினத்தைச் சோ்ந்த துப்புரவுப் பணியாளா்கள் வியாழக்கிழமை காலை முதல் பணிக்குச் செல்லாமல் செயல் அலுவலா் யசோதையை கண்டித்து பேரூராட்சி அலுவலக வாயிலில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலா் யசோதையிடம் அவா்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்திய போது, அவா் அனைத்து வாா்டு உறுப்பினா்களுடன் மன்றக் கூட்டத்தில் பேசி ஆலோசித்த பிறகு முடிவு தெரிவிப்பதாக கூறியதாக தூய்மைப் பணியாளா்கள் தெரிவித்தனா். இதனிடையே செயல் அலுவலா் யசோதை போராட்டம் நடத்தியவா்களிடம் மாற்று சமுதாயத்தினா் 6 பேருக்கு சுழற்சி முறையில் துப்புரவு பணி வழங்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் பணிக்கு திரும்பினா்.
