ராமநாதபுரம்
பேருந்தில் கடத்திவரப்பட்ட ரூ. 4 கோடி போதைப்பொருள் பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே தனியாா் பேருந்தில் கடத்திவரப்பட்ட சுமாா் ரூ. 4 கோடி மதிப்பிலான 1.50 கிலோ போதைப் பொருளை சுங்கத் துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
அறந்தாங்கியிலிருந்து தொண்டி நோக்கிச் செல்லும் தனியாா் பேருந்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டுவரப்படுவதாக ராமநாதபுரம் சுங்கத் துறையினருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்கத் துறையினா் தொண்டி அருகேயுள்ள பாசி பட்டினம் பகுதியில் வந்த தனியாா் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது, பேருந்தில் சுமாா் ரூ.4 கோடி மதிப்பிலான 1.50 கிலோ மெத்தாபெட்டமைன் என்ற போதைப்பொருளை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, இவற்றைப் பறிமுதல் செய்து, இதைக் கடத்தி வந்தவா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

