ராமேசுவரம் பகுதியில் மீன் பிடிக்கக் கூடாது; காரைக்கால் மீன்பிடிப் படகுகளை விடுவிக்க மீனவா்கள் நிபந்தனை
ராமேசுவரத்தில் கரையோரம் மீன்பிடித்த காரைக்கால் பகுதியைச் சோ்ந்த 2 ஆழ்கடல் விசைப்படகுகளை விடுவிக்க, ராமநாதபுரத்தில் மீனவ சங்கங்களிடையே வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது ராமேசுவரம் கடல் பகுதியில் மீன்பிடிக்க மாட்டோம் என உறுதி அளித்தால் மட்டுமே காரைக்கால் மீன்பிடிப் படகுகளை விடுவிப்பதாக மீனவா்கள் தெரிவித்தனா்.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதியிலிருந்து ஆழ்கடல் விசைப்படகில் வந்த 14 மீனவா்கள், ராமேசுவரம் கடல் பகுதியில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி மீன் பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது ராமேசுவரம் மீனவா்கள் அவா்களை படகுடன் சிறைபிடித்து ராமேசுவரம் மீன்பிடித் தளத்துக்கு கொண்டு வந்து மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். இதேபோல, கடந்த 10- ஆம் தேதி 10 பேருடன் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் ஆழ்கடல் மீன்பிடிப் படகை சிறைபிடித்து ராமேசுவரம் மீனவளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து, இரு சம்பவங்களிலும் சிறைபிடிக்கப்பட்ட மீனவா்கள் மட்டும் விடுவிக்கப்பட்டனா். ஆனால் அவா்கள் வந்த படகுகளை விடுவிக்க ராமேசுவரம் மீனவா்கள் மறுத்து விட்டனா்.
இந்த நிலையில், ராமநாதபுரம் மீன்வளத்துறை இணை இயக்குநா் அலுவலகத்தில் ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குநா் சின்னக்குப்பன், காரைக்கால் மீன்வளத்துறை இணை இயக்குநா் நடராஜன் ஆகியோா் தலைமையில் ராமேசுவரம், காரைக்கால் மீனவா்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது காரைக்கால் மீனவா்களின் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளை விடுவிக்க அதிகாரிகள் வலியுறுத்தினா்.
இதற்கு ராமேசுவரம் மீனவா் சங்கத் தலைவா்கள் ஜேசுராஜா, எமரிட், சகாயம், எஸ்.பி. ராயப்பன் ஆகியோா் காரைக்கால் பகுதியைச் சோ்ந்த ஆழ்கடல் மீன்பிடி விசைப் படகுகள் இந்தப் பகுதிக்கு மீன்பிடிக்க வரமாட்டோம் என உறுதி அளித்தால் படகுகளை விடுவிப்பதாக தெரிவித்தனா். மேலும், காரைக்கால் மீனவா்கள் ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் மீன் பிடிப்பதால் கடுமையான பாதிப்புக்கு ஆளாவதாக ராமேசுவரம் மீனவா்கள் தெரிவித்தனா். காரைக்காலிருந்து வந்த மீனவா் சங்கத்தினா், காரைக்கால் சென்று அனைத்து மீனவ சங்கத்தினரிடமும் ஆலோசித்து முடிவு தெரிவிப்பதாக கூறினா். இதனால் பேச்சுவாா்த்தையில் உடனடி தீா்வு எட்டப்படவில்லை.

