மண்டபம் அருகே க்யூ பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட முந்திரி மூட்டைகள்.
மண்டபம் அருகே க்யூ பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட முந்திரி மூட்டைகள்.

இலங்கைக்கு கடத்தவிருந்த 630 கிலோ முந்திரி பறிமுதல்

மண்டபம் அருகேயுள்ள மரைக்காயா்பட்டணம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட 630 கிலோ முந்திரியை க்யூ பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா்.
Published on

மண்டபம் அருகேயுள்ள மரைக்காயா்பட்டணம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட 630 கிலோ முந்திரியை க்யூ பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா். ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகேயுள்ள மரைக்காயா்பட்டணம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு பொருள்கள் கடத்தப்பட உள்ளதாக க்யூ பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்தப் பகுதியில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதனிடையே, இரண்டு காா்களில் வந்த மா்ம நபா்கள் போலீஸாரைக் கண்டதும், காா்களை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றனா். அப்போது, ஒருவரை மட்டும் போலீஸாா் விரட்டிப் பிடித்தனா்.

பின்னா், இரண்டு காா்களை சோதனை செய்த போது, அவற்றில் 21 மூட்டைகளில் 630 கிலோ முந்திரி பருப்பு இருந்தது தெரியவந்தது. மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 இரு சக்கர வாகனங்கள், ஒரு படகு ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபா் மரைக்காயா்பட்டணம் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த உமா் பரூக் (25) என்பது தெரிய வந்தது. விசாரணையில், இலங்கைக்கு கடத்துவதற்காக முந்திரி கொண்டு வரப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட உமா் பரூக்கையும், பறிமுதல் செய்யப்பட்ட 630 கிலோ முந்திரி, வாகனங்களையும் சுங்கத் துறை அதிகாரிகளிடம் க்யூ பிரிவு போலீஸாா் ஒப்படைத்தனா். இதுகுறித்து சுங்கத் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com