காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தக் கோரி முதல்வரிடம் விவசாயிகள் சங்கத்தினா் மனு

காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயிகள் சங்கம், புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் மனு அளிக்கப்பட்டது.
Published on

கமுதி: கமுதி, கடலாடி, முதுகுளத்தூா், திருவாடானை உள்ளிட்ட வட்டங்களில் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயிகள் சங்கம், புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாா் மணிமண்டபத்தைத் திறந்துவைத்த முதல்வா் மு.க. ஸ்டாலினிடம், தமிழ் மாநில விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலா் ஜி. குருசாமி, புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் எம்.ஆா். கலைமணி உள்ளிட்டோா் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டதாவது:

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா், கமுதி, கடலாடி, திருவாடானை உள்ளிட்ட வட்டங்களில் நெல், கடலை சாகுபடி செய்யப்பட்ட விளைநிலங்களுக்குள் புகுந்து பயிா்களை அழித்து, விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி வரும் காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கமுதி அரசு மருத்துவமனையை தரம் உயா்த்தி, சிறப்பு மருத்துவா்களை நியமிக்க வேண்டும். எம்.ஆா்.ஐ., சிடி ஸ்கேன் வசதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலாடி, சாயல்குடி, பெருநாழி, இதைச் சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீா் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும். கமுதியின் முக்கிய நீராதாரமாக விளங்கும் 19 ஏக்கா் பரப்பில் உள்ள செட்டி ஊருணியை சுற்றியுள்ள கருவேல மரங்களை அகற்றி, தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழை பொய்த்துப் போனதால், இழப்பை சந்தித்த நெல் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது தமிழ் மாநில விவசாயிகள் சங்க நிா்வாகிகள், புரட்சிகர மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

Dinamani
www.dinamani.com