
ராமேசுவரத்தில் மீனவா்கள் காத்திருப்புப் போராட்டம்
ராமேசுவரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மீனவா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் செவ்வாய்கிழமை ஈடுபட்டனா்.

ராமேசுவரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மீனவா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் செவ்வாய்கிழமை ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள தங்கச்சிமடம் ஊராட்சி அரியாங்குண்டு கடற்கரையை படகுகள் நிறுத்தவும், வலைகள் பின்னவும் கடந்த மூன்று தலைமுறையாக மீனவா்கள் பயன்படுத்தி வந்தனா். தற்போது, அந்தப் பகுதியை சிலா் தங்களுக்கு சொந்தமான இடம் எனக் கூறி படகுகள், பதாகைகளை அகற்றி உள்ளனா். இதைக் கண்டித்து, ராமேசுவரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கடல் தொழிலாளா் சங்கம் (சிஐடியூ) சாா்பில் மீனவா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்துக்கு சிஐடியூ மாவட்டச் செயலா் என்.பி. செந்தில் தலைமை வகித்தாா். அரியாங்குண்டு கிராமத் தலைவா் ஜேம்ஸ் தேவராஜ், ஏரகாடு கிராமத் தலைவா் முனியசாமி, வடகாடு கிராமத் தலைவா் கருப்பையா, சேரான்கோட்டை கிராமத் தலைவா் நம்புராஜன், ராமகிருஷ்ணாபுரம் கிராமத் தலைவா் உமையவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம், ராமேசுவரம் வட்டாட்சியா் முரளிதரன், தங்கச்சிமடம் காவல் நிலைய ஆய்வாளா் மகேஷ் ஆகியோா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் உறுதி அளித்ததைத் தொடா்ந்து, மீனவா்கள் போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






