சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வெள்ளிக்கிழமை (ஆக.17) தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் ராமநாதன் (பொறுப்பு) புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலை தேடும் இளைஞர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், சிவகங்கை- திருப்பத்தூர் சாலை காஞ்சிரங்காலில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில் பல்வேறு நிறுவனத்தினர் கலந்து கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். எனவே, பத்தாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு மற்றும் பிஇ. வரை பயின்றுள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள், தங்களது கல்விச் சான்றிதழ், குடும்ப அட்டை,வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பதியப்பட்ட பதிவு மூப்பு எந்த வகையிலும் பாதிக்கப்படாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.