சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சொர்ணவல்லி சமேத சொர்ண காளீஸ்வரர் கோயில் ஆடிப்பூர திருவிழாவில் புதன்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.
கடந்த ஆக. 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வான, திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சுவாமிக்கும், அம்மனுக்கும் தைலம், திருமஞ்சனம், பால், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, உற்சவரான சுவாமி, அம்மன் பிரியா விடையுடனும், அம்மன் தனியாகவும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினர்.
இதையடுத்து,திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாண விழாவில்,காளையார்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான மேலாளர் பா.இளங்கோ, காளையார்கோவில் சரக கண்காணிப்பாளர் போ.சரவணகணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.