சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் குடியிருப்பை சரிவர பராமரிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மானாமதுரை நகர் பகுதியில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. இந்த இயக்கத்தில் இக்கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரையா, ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜாராம், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் கட்சியைச் சேர்ந்த செந்தில்குமார், சாத்தையா, ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று மக்களை சந்தித்து அந்தந்த பகுதி பொதுமக்களின் கோரிக்கை குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.
அப்போது மானாமதுரை உடைகுளம் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அலுவலகக் கட்டடம் அதன் ஊழியர்களின் குடியிருப்புகள் பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து இடிந்தும், கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்தும் இருப்பதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். உடைகுளம் பகுதியில் வைகை பராமரிப்புக் கோட்ட அலுவலகமும், சருகனியாறு உட்கோட்ட அலுவலகமும் உள்ளன. இங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தங்க குடியிருப்புகள் உள்ளன. இவையெல்லாம் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த அலுவலகம், குடியிருப்புகளை சுற்றி உள்ள சுற்றுசுவர் சேதமடைந்து கிடக்கின்றன. இதனால் இந்த குடியிருப்புகளில் யாரும் குடியிருக்காமல் அனைத்து குடியிருப்புகளும் காலியாகவே உள்ளன. ஆனால் அவ்வப்போது இந்த அலுவலகம் குடியிருப்புகளை பராமரிப்பு செய்ததாக துறை நிர்வாகம் மூலம் நிதி முறைகேடு நடந்து அரசு நிதி வீணடிக்கப்படுவதாகவும் இதை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்வதில்லை என்றும் புகார் கூறப்படுகிறது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரையா கூறியது:
மானாமதுரை உடைகுளம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகங்கள் மற்றும் ஊழியர்கள் குடியிருப்புகள் பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து கிடக்கின்றன. இவற்றை பராமரிப்பு செய்ததாக கணக்கு காட்டி அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது குறித்து விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் ஜூன் 15 ஆம் தேதி மேற்கண்ட குடியிருப்புகளில் 25 ஏழைக் குடும்பங்களை குடியேற்றும் போராட்டத்தை நடத்த கட்சி சார்பில் முடிவு செய்துள்ளோம் என்றார்.