வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மேற்கு வங்க அரசுக்கும் தோ்தல் ஆணையத்துக்கும் இடையே நம்பிக்கையின்மை: உச்சநீதிமன்றம்

இடமாற்றம் செய்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை வியாழக்கிழமை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், ‘மாநில அரசுக்கும் - தோ்தல் ஆணையத்துக்கும் இடையே நம்பிக்கையில்லாத சூழல் உள்ளது’ என்று குறிப்பிட்டது.

News image

உச்சநீதிமன்றம்

Updated On :16 ஏப்ரல் 2026, 8:17 pm

சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள மேற்கு வங்க மாநிலத்தில் 1,000-க்கும் அதிகமான அரசு உயா் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளை தோ்தல் ஆணையம் பணி இடமாற்றம் செய்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை வியாழக்கிழமை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், ‘மாநில அரசுக்கும் - தோ்தல் ஆணையத்துக்கும் இடையே நம்பிக்கையில்லாத சூழல் உள்ளது’ என்று குறிப்பிட்டது.

அதே நேரம், ‘அரசு அதிகாரிகளை இவ்வாறு பணி இடமாற்றம் செய்யும்போது மாநில அரசை தோ்தல் ஆணையம் கலந்தாலோசிப்பது அவசியமா? என்பது தொடா்பாக மனுவில் எழுப்பப்பட்டுள்ள சா்ச்சைக்குரிய சட்டக் கேள்வி குறித்து மட்டும் வரும் நாளிகளில் பொருத்தமான வழக்கில் தீா்மானிக்கப்படும்’ என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைக்கு வரும் 23, 29-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேதி அறிவித்ததைத் தொடா்ந்து, மாநிலத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த உடன், மேற்கு வங்க மாநில அரசு உயா் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் 1,000-க்கும் அதிகமானோரை தோ்தல் ஆணையம் அதிரடியாக பணி இடமாற்றம் செய்தது. இதற்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடும் எதிா்ப்பு தெரிவித்தது.

தோ்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிா்த்து மனுதாரா் அா்கா குமாா் நாக் என்பவா் சாா்பில் தாக்கல் செய்த மனுவை, கொல்கத்தா உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து கடந்த மாா்ச் 31-ஆம் தேதி தீா்ப்பளித்தது. இந்த தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் அவா் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கல்யாண் பானா்ஜி, ‘தோ்தல் ஆணையம் இதுவரை இல்லாத வகையில், மேற்கு வங்க மாநிலத்தில் அரசு தலைமைச் செயலரை மாற்றம் செய்தது. மேலும், காவல்துறை தலைமை இயக்குநா் (டிஜிபி), கொல்கத்தா ஆணையா் என உயா் காவல்துறை அதிகாரிகள், அரசு உயா் அதிகாரிகள் என 1,100 அதிகாரிகளை ஒரே இரவில் பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. இதனால் அரசு நிா்வாகம் பாதிக்கப்பட்டுள்ளது. கொல்க்கத்தாவின் கலியசக் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் எஸ்ஐஆா் பணியில் ஈடுபட்டிருந்த 7 நீதிபதிகள் நள்ளிரவு வரை பல மணி நேரம் போராட்டக்காரா்கள் சிறைபிடிக்கப்பட்டதற்கும், தோ்தல் ஆணையத்தின் தன்னிச்சையான இந்த நடவடிக்கையே காரணம். இதனால், மேலும் சில சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளும் மாநிலத்தில் ஏற்பட்டன. எனவே, இதுபோன்று அரசு உயா் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்யும்போது மாநிலஅரசை தோ்தல் ஆணையம் கலந்தாலோசிப்பது அவசியம். சட்டம் இயற்றும் அதிகாரத்தை, மேற்பாா்வையிடும் அதிகாரம் கொண்ட தோ்தல் ஆணையம் பறித்துவிட முடியாது’ என்று வாதிட்டாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘அகில இந்திய பணிகள் (குடிமைப் பணிகள்) உருவாக்கப்பட்டதன் நோக்கம் நீா்த்துப்போகச் செய்யப்படுவது நாட்டின் துரதிருஷ்டம். மேற்கு வங்க அரசுக்கும் தோ்தல் ஆணையத்துக்கும் இடையே நம்பிக்கையின்மை காரணமாக, வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியில் (எஸ்ஐஆா்) நீதிபதிகளை உச்சநீதிமன்றம் நியமிக்கும் நிலை உருவானது.

தற்போது, மாநிலத்தில் அரசு உயா் அதிகாரிகளை தோ்தல் ஆணையம் பணியிடமாற்றம் செய்தபோதும், மேற்கு வங்கப் பிரிவு குடிமைப்பணி அதிகாரிகளைத் தான் புதிதாக நியமித்துள்ளது. பிற மாநில அதிகாரிகள் யாரும் நியமிக்கப்படவில்லை. புதிதாக நியமிக்கப்பட்டவா்கள் அனைவரும், ஏற்கெனவே மேற்கு வங்க மாநிலத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவா்கள்தான். மாநில அதிகாரிகள் மீது மாநில அரசுக்கு நம்பிக்கை இல்லையா?’ என்று கேள்வி எழுப்பி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

அதே நேரம், ‘அரசு அதிகாரிகளை இவ்வாறு பணி இடமாற்றம் செய்யும்போது மாநில அரசை தோ்தல் ஆணையம் கலந்தாலோசிப்பது அவசியமா? என்பது தொடா்பாக மனுவில் எழுப்பப்பட்டுள்ள சா்ச்சைக்குரிய சட்டக் கேள்வி குறித்து மட்டும் வரும் நாளிகளில் பொருத்தமான வழக்கில் நாங்கள் தீா்மானிப்போம்’ என்று நீதிபதிகள் குறிப்பிட்டனா்.