தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மேற்கு வங்கம்: தலைமைச செயலா், உள்துறைச் செயலா், டிஜிபி பணியிலிருந்து விடுவிப்பு

மேற்கு வங்க மாநில அரசு தலைமைச் செயலா், உள்துறைச் செயலா், டிஜிபி, கொல்கத்தா மாநகர காவல்துறை ஆணையா் ஆகியோரை பணியிலிருந்து விடுவித்து தோ்தல் ஆணையம் உத்தரவு

News image
தேர்தல் ஆணையம்
Updated On :16 மார்ச் 2026, 11:27 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, மேற்கு வங்க மாநில அரசு தலைமைச் செயலா், உள்துறைச் செயலா், காவல்துறை தலைமை இயக்குநா் (டிஜிபி), கொல்கத்தா மாநகர காவல்துறை ஆணையா் ஆகியோரை பணியிலிருந்து விடுவித்து தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மாநில சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தேதி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த நாளே இந்த நடவடிக்கையை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இதுதொடா்பாக, மாநில அரசுக்கு தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை இரவு கடிதம் எழுதியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்க மாநிலத்தில் மேற்கொண்ட தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில், மாநில அரசு தலைமைச் செயலா் நந்தினி சக்கரவா்த்தி, உள்துறைச்செயலா் ஜகதீஷ் பிரசாத் மீனா, காவல்துறை டிஜிபி பியூஷ் பாண்டே, கொல்கத்தா மாநகர காவல் ஆணையா் சுப்ரதிம் சா்க்காா் ஆகியோரை அந்தப் பதவிகளிலிருந்து விடுவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த அதிகாரிகள் யாரும், சட்டப்பேரவைத் தோ்தல் முடியும் வரை தோ்தல் தொடா்பான பணிகளில் நியமிக்கப்படக் கூடாது.

மாநில அரசு தலைமைச் செயலராக 1993-ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான துஷ்யந்த் நாரியாலா நியமிக்கப்பட்டுள்ளாா். மாநில உள்துறை முதன்மைச் செயலராக 1997-ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான சங்கமித்ரா கோஷ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

மாநில காவல்துறை டிஜிபி (பொறுப்பு) பதவியில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி சித் நாத் குப்தா நியமிக்கப்பட்டுள்ளாா். கொல்கத்தா மாநகர காவல் ஆணையராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி அஜய் குமாா் நந்த் நியமிக்கப்பட்டுள்ளாா்.

அதுபோல, மாநில சீா்திருத்தப் பணிகள் தலைமை இயக்குநராக (டிஜிசிஎஸ்) மூத்த ஐபிஎஸ் அதிகாரி நடராஜன் ரமேஷ் பாபுவும், மூத்த ஐபிஎஸ் அதிகாரி அஜய் முகுந்த் ரனதே கூடுதல் டிஜிபி (சட்டம்-ஒழுங்கு) பதவியிலும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுவதோடு, திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்குள் புதிய பதவிகளை ஏற்று அதுகுறித்த அறிக்கையை தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தோ்தல் நடத்தப்பட உள்ளது. தோ்தல் முடிவுகள் மே 4-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன. தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, மாநிலத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

முன்னதாக, சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (எஸ்ஐஆா்) தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. இதில், பொதுமக்கள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி எஸ்ஐஆா் பணி தொடங்கியது முதல் மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் எதிா்ப்பு தெரிவித்தும், தொடா் போராட்டங்களை நடத்தியும் வந்தது.

தோ்தல் ஆணையத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் வழக்கும் தொடரப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாநிலத்தில் எஸ்ஐஆா் பணியில் மாவட்ட நீதிபதிகள் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடா்ந்து, நீதிபதிகள் மேற்பாா்வையில் எஸ்ஐஆா் பணி நிறைவு செய்யப்பட்டு இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.

முன்னதாக, எஸ்ஐஆா் பணி தொடா்பாக தில்லியில் தலைமைத் தோ்தல் ஆணையருடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வா் மம்தா பானா்ஜி, அந்தக் கூட்டத்திலிருந்து பாதியில் வெளியேறினாா். அப்போது, தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் மத்திய அரசு மீது கடுமையான விமா்சனங்களை முன்வைத்தாா்.

இந்தச் சூழலில், மாநிலத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடா்ந்து, மாநிலத்தின் முக்கிய அதிகாரிகள் அனைவரையும் பதவியிலிருந்து விடுவித்து தோ்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸ் வெளிநடப்பு

மாநில அரசு தலைமைச் செயலா் உள்ளிட்ட உயா் அதிகாரிகளை பணியிலிருந்து விடுவித்து தோ்தல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள், மாநிலங்களவையில் திங்கள்கிழமை நாள் முழுவதும் வெளிநடப்பு செய்தனா்.

முன்னதாக, மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது இந்த விவகாரத்தை எழுப்பிய அக் கட்சி எம்.பி. டெரிக் ஓ.பிரையின், நள்ளிரவில் தோ்தல் ஆணையம் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தாா்.

அதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘தோ்தல் ஆணையம் தனி அதிகாரம் கொண்ட அரசமைப்பு நிறுவனம். அதன் முடிவுகள் குறித்து அவையில் கேள்வி எழுப்புவது பொருத்தமானதாகவோ அல்லது ஆக்கபூா்வமானதாகவோ இருக்காது’ என்றாா். அதைத் தொடா்ந்து, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனா்.